25 November 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » விளையாட்டு செய்திகள் » கீழக்கரையில் இடியுடன் கொட்டிய கனமழை: கடலுக்குச் சென்ற மீனவர்கள் பாதியிலேயே கரை திரும்பினர்!

கீழக்கரையில் இடியுடன் கொட்டிய கனமழை: கடலுக்குச் சென்ற மீனவர்கள் பாதியிலேயே கரை திரும்பினர்!

எழுதியவர்: Baker BAker November 25, 2026, 9:22 am

ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று பரவலாக மழை பெய்து வரும் நிலையில், கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கீழக்கரை கடற்கரைப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ததால் மீனவர்களின் இயல்பு வாழ்க்கையும், வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளன.

காலையில் வழக்கம்போல் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், கடலில் திடீரென பெய்த கனமழை மற்றும் இடியுடன் கூடிய வானிலை காரணமாக பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பாதியிலேயே கரைக்குத் திரும்பினர். இதனால் அன்றைய மீன்பிடித் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேதனை தெரிவித்த மீனவர்கள், “அதிகாலையிலேயே எழுந்து படகுகளுக்குத் தேவையான டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை நிரப்பிக்கொண்டு கடலுக்குச் சென்றோம். ஆனால் மழையும், இடியும் அதிகமாக இருந்ததால் தொடர்ந்து கடலில் இருக்க முடியாமல் மீண்டும் கரைக்குத் திரும்பிவிட்டோம். இதனால் எரிபொருளுக்குச் செய்த செலவு வீணாகியுள்ளது. இன்று கிடைக்க வேண்டிய வருமானமும் கிடைக்கவில்லை. இந்த இழப்பை எப்படி ஈடுசெய்வது என்று தெரியவில்லை” என வேதனையுடன் தெரிவித்தனர்.

மேலும், வானிலை மாற்றம் மற்றும் மழை எச்சரிக்கை தொடர்பாக மீன்வளத்துறை அதிகாரிகள் முன்கூட்டியே உரிய தகவல்களையோ, முன்னெச்சரிக்கை அறிவிப்புகளையோ வழங்குவதில்லை என்றும் மீனவர்கள் குற்றம்சாட்டினர். கடலுக்குச் செல்லும் மீனவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வானிலை எச்சரிக்கைகளை உடனுக்குடன் மீனவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையே, கீழக்கரை கடலோரப் பகுதிகளில் கடல் நீர் சிறிதளவு உள்வாங்கிய நிலையில் காணப்பட்டது. இதனால் கரையோரங்களில் கட்டி வைக்கப்பட்டிருந்த சிறிய படகுகள் சில தரைதட்டிய நிலையில் காணப்பட்டன.

தொடர்ந்து பெய்து வரும் மழையால் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகள், முதியவர்கள் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனால் கீழக்கரை பகுதியில் பொதுமக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களின் வாழ்வாதார இழப்பை கருத்தில் கொண்டு, வானிலை எச்சரிக்கைகளை உடனுக்குடன் தெரிவிக்கவும், கடலோரப் பகுதிகளில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மீன்வளத்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என்பதே மீனவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!