வயல்வெளியில் படபடக்கும் பிளாஸ்டிக் பைகள்… சத்தத்தைக் கேட்டே தெறித்து ஓடும் வனவிலங்குகள்! 67 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்களைக் காக்க விவசாயிகளின் வித்தியாசமான முயற்சி!
ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியத்தில் இயற்கையோடு இணைந்த புதிய பாதுகாப்பு யுக்தி – விவசாயிகள் மத்தியில் வரவேற்பு!
ராமநாதபுரம் மாவட்டம் என்றாலே நெல் விவசாயத்திற்கு முக்கியத்துவம் பெற்ற திருவாடானை தாலுகா நினைவுக்கு வரும். இப்பகுதியில் சுமார் 67 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. விவசாயிகள் இரவு பகலாக உழைத்து வளர்க்கும் நெற்பயிர்களைப் பாதுகாப்பது தற்போது பெரும் சவாலாக மாறியுள்ளது.
வயல்களுக்குள் கூட்டம் கூட்டமாகப் புகும் புள்ளிமான்கள், மயில்கள் மற்றும் பல்வேறு பறவைகள் நெற்பயிர்களைச் சேதப்படுத்தி வருவதால், அவற்றை விரட்ட விவசாயிகள் புதுப்புது யுக்திகளைக் கையாண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, வயல்வெளிகளில் கயிறுகளைக் கட்டி அதில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் சாக்குகளை வரிசையாகத் தொங்கவிட்டுள்ளனர். காற்று வீசும்போது அவை ஒன்றோடொன்று மோதி ‘படபட’ என எழுப்பும் சத்தம், வயலுக்குள் நுழைய முயலும் மான்கள் மற்றும் பறவைகளை அச்சமடையச் செய்து விரட்டுகிறது.
இயந்திரம் இல்லை… மின்சாரச் செலவு இல்லை… காவலுக்கு ஆட்களும் தேவையில்லை! கிடைக்கும் பழைய பிளாஸ்டிக் பைகள், சாக்குகளைக் கொண்டே பயிர்களைக் காக்கும் இந்த எளிய முயற்சி விவசாயிகளுக்கு உதவியாக அமைந்துள்ளது.
ஒருபுறம் இயற்கையின் அழகான உயிரினங்கள், மறுபுறம் விவசாயிகளின் வாழ்வாதாரமான நெற்பயிர்கள் என இரண்டையும் கருத்தில் கொண்டு, அவற்றால் ஏற்படும் பயிர்ச் சேதத்தைக் குறைக்க விவசாயிகள் மேற்கொண்டுள்ள இந்த வித்தியாசமான முயற்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
விவசாயிகளின் புத்திசாலித்தனமான இந்த நூதன யுக்திக்கு திருவாடானை பகுதியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.




You must be logged in to post a comment.