24 November 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பெண் குழந்தைகளை படிக்க வைப்பது மிகவும் அவசியம்; தென்காசி எம்பி பேச்சு..

பெண் குழந்தைகளை படிக்க வைப்பது மிகவும் அவசியம்; தென்காசி எம்பி பேச்சு..

எழுதியவர்: Abubakker Sithik November 24, 2026, 3:33 pm

பெண் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் அதுவே சமுதாய மாற்றத்திற்கு ஊன்று கோலாக அமையும் என பெண் குழந்தைகளுக்கான வரவேற்பு பெட்டகம் வழங்கும் விழாவில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ராணி ஸ்ரீகுமார் பேசினார்.

தென்காசி மாவட்டம், மேலகரம் பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் இன்று (24.11.2026) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் “பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளுக்கான வரவேற்பு பெட்டகத்தினை தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ராணி ஸ்ரீகுமார் தலைமையில் மாவட்ட ஆட்சியர் மரு.மோனிகா ராணா வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ராணி ஸ்ரீகுமார் பேசுகையில் தெரிவித்ததாவது, பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டம் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்திலும், பெண் குழந்தைகளுக்கு கல்வி அறிவு வழங்கும் விதத்திலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு பெண் குழந்தை வீட்டில் பிறக்கிறது என்றால் எல்லோரும் என்ன சொல்வார்கள் மகாலெட்சுமி பிறந்து இருக்கிறாள் என்று சொல்வார்கள். அந்த பெண் குழந்தை இந்த சமுதாயத்தில் எந்த அளவிற்கு கல்வி அறிவு பெற்று முன்னேறுகிறதோ அதை பொறுத்து தான் இந்த சமூகத்தின் வளர்ச்சி இருக்கிறது. அதே நேரத்தில் அந்த பெண் குழந்தைகளுக்கு இந்த சமூகம் எந்த அளவிற்கு பாதுகாப்பு கொடுக்கிறது என்பதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

பெண் குழந்தைகளுக்கு கல்வி மிகவும் அவசியமாகும். ஒரு பெண் கல்வி கற்றால் அந்த குடும்பமே முன்னேறும். குடும்பம் முன்னேறினால் இந்த சமூகம் முன்னேறும் இந்த நாடும் முன்னேறும். நம் தமிழ்நாட்டில் பெண்கள் இந்த அளவிற்கு முன்னேறி இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் தமிழ்நாட்டில் பெண் கல்வியின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறார்கள். கல்விக்கான திட்டங்கள் நிறைய செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்று நாட்டிலேயே பெண்கள் முன்னேற்றத்தில் தமிழ்நாடு முதன்மையான மாநிலமாக உள்ளது.

கடந்த வாரத்தில் பெண் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மாநாட்டிற்கு சென்றிருந்தேன், அங்கே அனைவரும் பேசியது என்வென்றால் பெண்களுக்கு கல்வி மிகவும் அவசியமானது என்பது தான். கல்வி இருந்தால்தான் பெண்கள் பொருளாதார சுதந்திரத்தை அடைய முடியும். பெண் குழந்தைகளுக்கு யாரோ கொடுக்கிற சலுகை அல்ல இது நம் அனைவரின் உரிமை ஆகும்.பெண் குழந்தைகளை வீட்டில் வளர்க்கும் பொழுது எந்த ஒரு பாகுபாடும் காட்டாதீர்கள். எங்கிருந்து இந்த பாகுபாடு ஆரம்பமாகிறது என்றால் வளரும் போது, படிக்க வைக்கும் போது எல்லா விஷயத்திலும் இந்த பாகுபாடு இருந்து கொண்டு இருக்கிறது. நம் தமிழ்நாடு பெண் கல்வி முன்னேற்றத்திலும் என அனைத்திலும் முதன்மையான மாநிலமாக உள்ளது.

அதேபோல் பெண் குழந்தைகளின் திருமணம் என்பது இன்றும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. பெண் குழந்தைகள் திருமணம் விஷயத்தை கேள்விப்பட்டால் மாவட்ட நிர்வாகத்தின் அவசர எண்ணை அழைத்து கூற வேண்டும். அதேபோல் பெண் குழந்தைகள் பாதுகாப்பதற்காக அவர்கள் வளரும் போதே தற்காப்பு கலைகளை கற்றுக் கொடுக்க வேண்டும். பெண் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் அதுவே சமுதாய மாற்றத்திற்கு ஊன்று கோலாக அமையும். பெண் குழந்தைகள் படித்தால்தான் இந்த நாடு முன்னேறும் என தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ராணி ஸ்ரீகுமார் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் பே.மதிவதனா, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.வி.கோவிந்தன், தென்காசி ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி ஜெயராணி மற்றும் தாய்மார்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!