17 November 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தீராத பால்குளம் கண்மாய் பிரச்சினை! 5 மடைகள் கட்டுவதில் முறைகேடு நடந்ததாகவும் அதிகாரிகளின் அலட்சியத்தால் 150 ஏக்கர் விவசாயம் அழியும் அபாயம்!

தீராத பால்குளம் கண்மாய் பிரச்சினை! 5 மடைகள் கட்டுவதில் முறைகேடு நடந்ததாகவும் அதிகாரிகளின் அலட்சியத்தால் 150 ஏக்கர் விவசாயம் அழியும் அபாயம்!

எழுதியவர்: Baker BAker November 17, 2026, 11:11 pm

இரண்டு ஆண்டுகளாகப் போராடும் கிராம மக்கள்; அரைகுறையாக விடப்பட்ட மடை கட்டுமானப் பணிகள் – அரசு நிதி முறையாகச் செலவிடப்பட்டதா என விவசாயிகள் சரமாரிக் கேள்வி! இயற்கைப் பேரிடர் ஏற்பட்டால் ஒட்டுமொத்த விவசாய நிலங்களும் நாசமாகும் அபாயம் – மாவட்ட ஆட்சியர் உடனடியாகத் தலையிடாவிட்டால் கிராமம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை!

ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா, கருங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பால்குளம் கிராமத்தில் உள்ள கண்மாயைச் சீரமைக்கும் பணிகள் கடந்த 2024-ம் ஆண்டே டெண்டர் விடப்பட்டும், இதுவரை முறையாகச் சீரமைக்கப்படவில்லை என கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

கண்மாயை முறையாகத் தூர்வாரி சீரமைக்காமலும், பாசனத்திற்குத் தேவையான ஐந்து மடைகளையும் தரமான முறையில் அமைக்காமலும் பணிகள் அரைகுறையாக விடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கிராம மக்கள் தொடர்ந்து போராடியும், அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.

கண்மாயில் ஐந்து மடைகள் அமைப்பதாகக் கூறி பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், மடைகள் முறையாகக் கட்டப்படாமல் ஆங்காங்கே கற்களைக் குவித்து அரைகுறையாக விட்டுச் சென்றுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். அரசு நிதியில் மேற்கொள்ளப்படும் இப்பணிகள் ஒப்பந்த விதிமுறைகளின்படி நடைபெற்றுள்ளதா ? பணிகளின் தரத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தார்களா? ஒப்பந்ததாரருக்கு முழுமையான தொகை வழங்கப்பட்டுள்ளதா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

மேலும், பணிகளில் முறைகேடு நடைபெற்றிருக்குமோ என்ற சந்தேகத்தையும் கிராம மக்கள் எழுப்பியுள்ளனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி, டெண்டர் விவரங்கள், ஒதுக்கப்பட்ட நிதி, பணிகளின் அளவீடுகள் மற்றும் தர ஆய்வு அறிக்கைகளை வெளிப்படையாக வெளியிட வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

இந்த பால்குளம் கண்மாயை நம்பி 500க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களும், 150-க்கும் மேற்பட்ட குடும்பங்களும் விவசாயத் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். தற்போது விவசாயப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பாசனத்திற்குத் தேவையான நீர் ஆதாரம் மிகவும் அவசியமாக உள்ளது.

ஆனால், ஐந்து மடைகளும் முறையாகக் கட்டப்படாத நிலையில், கனமழை, வெள்ளப்பெருக்கு அல்லது இயற்கைப் பேரிடர் ஏற்பட்டால் மடைகள் உடைந்து கண்மாய் நீர் வெளியேறி ஒட்டுமொத்த விவசாய நிலங்களும் பயிர்களும் நாசமாகும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மடைகள் உடைந்து பயிர்கள் அழிந்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். ஏற்கனவே விவசாயத்தை நம்பி வாழும் குடும்பங்கள் பெரும் பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்படும் என்றும் வேதனையுடன் கூறுகின்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த பால்குளம் கிராம மக்கள் ஒன்றுகூடி ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகளை ஆடியோ கால் மூலம் தொடர்புகொண்டு, ஐந்து மடைகளையும் முறையாகக் கட்டாமல் விட்டுச் சென்றது ஏன்? பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள் யார்? கட்டுமானத்தின் தரத்தை யார் உறுதி செய்தார்கள்? விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பார்கள்? என சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர்.

இதற்கு உரிய விளக்கம் அளிக்காத அதிகாரிகள், திங்கள்கிழமை நேரில் வந்து பார்வையிடுவதாகத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கிராம மக்களிடையே மேலும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

கடந்த 2024-ம் ஆண்டு டெண்டர் விடப்பட்ட பணிகள் 2026-ம் ஆண்டிலும் முழுமையான தீர்வை எட்டாதது ஏன்? விவசாயிகளின் தொடர் கோரிக்கைகளுக்கு இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? அரசு நிதியில் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் தரம் குறித்து உரிய ஆய்வு நடத்தப்பட்டதா? என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.

எனவே, மாவட்ட ஆட்சியர் உடனடியாக நேரில் ஆய்வு செய்து, பால்குளம் கண்மாயில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும். ஐந்து மடைகளையும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் ஆய்வு செய்து, தரமற்ற மற்றும் அரைகுறையான பணிகளைச் சீரமைத்து, முறையாகக் கட்டி முடிக்க வேண்டும். மேலும், கண்மாயை முழுமையாகச் சீரமைத்து விவசாயத்திற்குத் தேவையான நீர் ஆதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என்பதே கிராம மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டிய நீர்நிலைகளே அழிவின் விளிம்பில் இருக்கும்போது, அதிகாரிகளின் மெத்தனப் போக்கு தொடர்வது ஏன்? விவசாயிகளின் கண்ணீருக்குப் பதில் சொல்லப்போவது யார்? மாவட்ட நிர்வாகம் இனியும் காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் ஒட்டுமொத்த கிராம மக்களையும் ஒன்றுதிரட்டி மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என பால்குளம் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!