ஆம்புலன்ஸ் கூட வர முடியாத அவலநிலை; பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்வியும் பாதிப்பு
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கடந்த 15 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாகக் கிடக்கும் கிராம இணைப்புச் சாலை, தற்போது பெய்த மழையால் சகதிக் காடாக மாறியுள்ளதால், அவசர சிகிச்சை தேவைப்பட்ட மூதாட்டியை கிராம மக்கள் கட்டிலில் தூக்கிச் சென்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கமுதி அருகே எருமைகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட பொட்டல்புளி கிராமத்திற்குச் செல்லும் இணைப்புச் சாலை, கமுதி – பெருநாழி பிரதான சாலையிலிருந்து பிரிந்து செல்கிறது.
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலையாக அமைக்கப்பட்ட இந்தச் சாலை, அதன்பிறகு முறையாகப் பராமரிக்கப்படாததால் முற்றிலும் சேதமடைந்துள்ளது. சாலையில் இருந்த ஜல்லிக் கற்கள் பெயர்ந்து, ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் உருவாகி போக்குவரத்துக்கு முற்றிலும் லாயக்கற்ற நிலையில் உள்ளது.
தற்போது பெய்து வரும் மழையால் கரிசல் மண் நிறைந்த சாலை முழுவதும் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்வதற்குக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கல்வி நிலையங்களுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். அன்றாடத் தேவைகளுக்காக வெளியே செல்ல வேண்டிய கிராம மக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சாலை முழுவதும் சகதியாக இருந்ததால் ஆம்புலன்ஸ் கிராமத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் செய்வதறியாது தவித்த கிராம மக்கள், வேறு வழியின்றி மூதாட்டியை கட்டிலில் படுக்க வைத்து, சேறும் சகதியும் நிறைந்த பாதையில் தூக்கிச் சென்று பிரதான சாலையை அடைந்தனர். பின்னர் அங்கிருந்து இருசக்கர வாகனம் மூலம் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் கூட வர முடியாத அளவுக்கு ஒரு கிராமத்தின் சாலை மோசமாக இருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுத்து, 15 ஆண்டுகளாகச் சீரமைக்கப்படாமல் உள்ள பொட்டல்புளி கிராம இணைப்புச் சாலையைப் போர்க்கால அடிப்படையில் சீரமைத்து, தரமான தார் சாலை அமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




You must be logged in to post a comment.