18 November 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்னகத்தின் சபரிமலை ஸ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் கார்த்திகை முதல் நாள் விழா கோலாகலம்!

தென்னகத்தின் சபரிமலை ஸ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் கார்த்திகை முதல் நாள் விழா கோலாகலம்!

எழுதியவர்: Baker BAker November 17, 2026, 7:53 pm

அதிகாலை கணபதி ஹோமத்துடன் சிறப்பு பூஜைகள் – குருசாமி மோகன் தலைமையில் துளசி மாலை அணிந்த நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள்!

ராமநாதபுரத்தில் தென்னகத்தின் சபரிமலை என்று அழைக்கப்படும் ஸ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில், கார்த்திகை மாத முதல் நாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெற்றன. இதில் நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு, குருசாமி தலைமையில் துளசி மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினர்.

ராமநாதபுரத்தில் இயற்கை எழில்மிகுந்த ஆலமரங்கள், அத்தி மரங்கள் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயம், பக்தர்களால் தென்னகத்தின் சபரிமலை என்று போற்றப்படுகிறது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் ஆன்மிக நிகழ்வுகள் மற்றும் பாரம்பரிய பூஜைகளைப் போன்றே இவ்வாலயத்திலும் ஆண்டுதோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கார்த்திகை மாத முதல் நாளான இன்று அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமத்துடன் சிறப்பு யாகசாலை பூஜைகள் தொடங்கின. இதில் ஏராளமான சுவாமிமார்கள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனித நீர் குடங்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, ஸ்ரீ வல்லபை ஐயப்பனுக்கு பால், பன்னீர், திரவியப் பொடி, மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் மற்றும் சுவாமிமார்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆலயத்தின் முன்பு குருசாமி மோகன் தலைமையில் நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் துளசி மாலை அணிந்து, ஒரு மண்டல கால விரதத்தைத் தொடங்கினர்.

குறிப்பாக, இவ்வாலயத்தில் ஐயப்பனுக்கு மாலை அணியும் பக்தர்கள் பீடி, சிகரெட், புகையிலை மற்றும் போதைப்பொருட்கள் உள்ளிட்ட உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் எந்தவிதமான தீய பழக்கங்களிலும் ஈடுபடக்கூடாது என உறுதிமொழி ஏற்ற பின்னரே மாலை அணிவிக்கப்படுவது தனிச்சிறப்பாகும்.

பக்தி, ஒழுக்கம், தூய்மை மற்றும் நல்ல பழக்கவழக்கங்களை வலியுறுத்தும் வகையில் இந்த நடைமுறை ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு ஆலயம் முழுவதும் ஐயப்ப பக்தர்களின் “சுவாமியே சரணம் ஐயப்பா” என்ற சரண கோஷம் முழங்கியது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டதால் ஆலய வளாகம் ஆன்மிகச் சூழலுடன் காணப்பட்டது.

மேலும், வரும் டிசம்பர் 27ஆம் தேதி ஸ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் மண்டல பூஜை சிறப்பாக நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!