16 November 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேக்கரை அடவிநயினார் அணையிலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு..

மேக்கரை அடவிநயினார் அணையிலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு..

எழுதியவர்: Abubakker Sithik November 16, 2026, 1:20 pm

தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம், மேக்கரை கிராமம் அடவிநயினார் கோவில் நீர் தேக்கத்திலிருந்து பிசான பருவ சாகுபடிக்காக மாவட்ட ஆட்சியர் மரு.மோனிகா ராணா இன்று (16.11.2026) தண்ணீர் திறந்து வைத்தார்.

அடவிநயினார் நீர்த்தேக்கத் திட்டம் ரூ.6089.97 இலட்சத்திற்கு உலக வங்கியின் நிதி உதவியோடு 2004-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட திட்டமாகும். தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம் மேக்கரை கிராமத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கீழ்புறமாக சிற்றாற்றின் உபநதியான அனுமாநதியின் குறுக்கே 2004-ஆம் ஆண்டு, முழுவதும் கல்லணையால் 175.40 மி.கன அடி கொள்ளளவில் அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கம் கட்டப்பட்டது. இதன் நீளம் 670 மீ. இதில் கரிசல் கால், மேட்டுக்கால் என்ற இரு மதகுகளும் 100 மீ நீளத்தில் ஒரு வழிந்தோடியும் உள்ளது. அனுமான் நதியில் மொத்தம் 14 அணைக்கட்டுகள் உள்ளன. இதில் தலையணை முதல் ரெட்டைகுளம் அணை வரை உள்ள 11 அணைக்கட்டுகள், இதன் மூலம் 43 குளங்கள் பயன்பெறுகிறது.

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணையின்படி தென்காசி மாவட்டம், தென்காசி, செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் வட்டங்களிலுள்ள அடவிநயினார் கோவில் அணை பாசனத் திட்டத்தின் கீழுள்ள மேட்டுக்கால், கரிசல்கால், பண்பொழிகால், வல்லாக்குளம் கால், இலத்தூர்கால், நயினாகரம்கால், கிளாங்காடுகால், கம்பிளிகால், புங்கன்கால், சாம்பவர் வடகரைகால், ரெட்டைகுளம் கால்வாய், மேட்டுகால் மற்றும் கரிசல்கால் ஆகிய கால்வாய்களின் கீழ் பாசனம் பெறும் பாசன நிலங்களுக்கு பிசான பருவ சாகுபடிக்கு அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கத்திலிருந்து 16.11.2026 முதல் 31.03.2027 வரை 136 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 100 கன அடி அளவுக்கு மிகாமல் நீர் இருப்பு மற்றும் தேவையை பொறுத்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

எதிர்வரும் நாட்களில் வடகிழக்கு பருவமழையினால் மேலும் அணையில் நீர்வரத்து அதிகரிப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நீர்த்தேக்கத்தில் எதிர் வரும் நாட்களில் பருவமழை பொய்த்து எதிர்பார்க்கின்ற நீர்வரத்து கிடைக்கப் பெறவில்லை என்றால், இருக்கும் நீரை அனுமதிக்கப்பட்ட பாசன நிலங்கள் முழுமைக்கும் பயன்பெறும் வகையில் சுழற்சி முறையில் வழங்கப்படும் எனவும், நீரை சிக்கனமாக பயன்படுத்தவும், நீர்விநியோகப் பணியில் நீர்வளத்துறைக்கு ஒத்துழைப்புத் தருமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இதன் மூலம் வடகரை கீழ்பிடாகை, வடகரை மேல்பிடாகை, பண்பொழி. குத்துக்கல் வலசை, இலத்தூர், அச்சன்புதூர், நெடுவயல், கொடிக்குறிச்சி, நயினாகரம், கிளாங்காடு, ஆய்க்குடி, கம்பளி, சம்பவர் வடகரை, சுரண்டை ஆகிய கிராமங்கள் பயன்பெறும்.

இந்நிகழ்வில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தி.மு.ராஜேந்திரன், வடகரை பேரூராட்சி தலைவர் ஏ.சேக் தாவூத், செயற்பொறியாளர் நீர்வளத்துறை இளங்கோ, விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!