லாரி ஓட்டுநர் மரணம்: காவல் நிலையத்திற்குள் நுழைந்து அதரடி விசாரணை நடத்திய நீதிபதி!
மதுரை – செக்கானூரணி காவல் நிலையக் கழிவறையில் லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றவர் உயிரிழந்த விவகாரத்தில், பேரையூர் நீதிமன்ற நீதிபதி ஆனந்தராஜா நேரில் சென்று சம்பவ இடத்தை ஆய்வு செய்து, காவல்துறையினரிடமும் உயிரிழந்தவரின் குடும்பத்தினரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டார். இதற்கிடையே, காவல் ஆய்வாளர் உட்பட மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், தேவாரம் அருகே உள்ள அழகர் நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் மதுரையைச் சேர்ந்த நாகராஜ் என்ற ஏலக்காய் வியாபாரியிடம் லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். இவர் ஓட்டி வந்த சரக்கு வாகனம், தேவாரத்தில் இருந்து மதுரைக்கு ஏலக்காய் மற்றும் பார்சல்களை ஏற்றிச் சென்றபோது, வலந்தூர் கண்மாய்க் கரை அருகே திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுதொடர்பாக முதலில் வலந்தூர் காவல் நிலையத்தில் விபத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தீப்பிடித்த சரக்கு வாகனம் மூடிய கன்டெய்னர் போன்ற அமைப்பைக் கொண்டிருந்ததால், அது எளிதில் தீப்பிடிக்க வாய்ப்பில்லை என்ற சந்தேகம் காவல்துறையினருக்கு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தீ விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய உதவுமாறு கூறி, வெள்ளிக்கிழமை இரவு பாலகிருஷ்ணனை செக்கானூரணி காவல் நிலையத்திற்கு வரவழைத்துள்ளனர்.
அங்கு, புகாரில் சந்தேகம் இருப்பதாகக் கூறிய காவல்துறையினர், அவரை காவல் நிலையத்திலேயே இருக்குமாறு அறிவுறுத்தியதாகத் தெரிகிறது. இதற்கிடையே, சம்பவத்தன்று அதிகாலை 5.58 மணிக்கு பாலகிருஷ்ணன் காவல் நிலையத்திற்குள் சாதாரணமாக நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின.
அதன்பிறகு, காவல் நிலையக் கழிவறைக்குள் சென்ற பாலகிருஷ்ணன், அங்கு தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர் கழிவறைக்குள் சென்ற சிறிது நேரத்திலேயே, அங்கிருந்த பெண் காவலர்கள் பதற்றத்துடன் ஓடிவரும் காட்சிகளும் சிசிடிவி பதிவில் இடம்பெற்றுள்ளன. இந்தக் காட்சிகளைத் தங்களது தரப்பு ஆதாரமாகக் காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், பாலகிருஷ்ணனின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறிய அவரது குடும்பத்தினர், காவலர்கள் தாக்கிக் கொன்றுவிட்டு, தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடுவதாகக் குற்றம்சாட்டினர். மேலும், அவரது உடலைப் பெற்றுக்கொள்ள மறுத்து, காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 100-க்கும் மேற்பட்ட உறவினர்களும் பொதுமக்களும் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதற்கிடையே, பாலகிருஷ்ணனின் மனைவி சுதா, தனது கணவருக்கு காவல்துறையினர் கடுமையான அழுத்தம் கொடுத்ததாகக் குற்றம்சாட்டியுள்ளார். தீப்பிடித்து எரிந்த ஏலக்காய் மூட்டைகளுக்குத் தனது கணவர்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று காவல்துறையினர் வற்புறுத்தியதாகவும், சம்பவத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே அவரை அழைத்து விசாரித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அப்போது காவலர்கள் தன்னைத் தாக்கியதாகப் பாலகிருஷ்ணன் தன்னிடம் கூறியதாகவும், மீண்டும் விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்குச் சென்ற நிலையில்தான் அவரது உயிரிழப்பு குறித்த தகவல் கிடைத்ததாகவும் சுதா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் காவல் நிலையத்திலேயே நிகழ்ந்துள்ளதால், நீதிமன்றத்தின் சார்பில் நேரடி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பேரையூர் நீதிமன்ற நீதிபதி ஆனந்தராஜா செக்கானூரணி காவல் நிலையத்திற்கு நேரில் சென்று, சம்பவம் நடைபெற்ற கழிவறை மற்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்ட இடங்களை ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்தார்.
மேலும், அங்கு பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகளிடம் சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்தினார். மாலை 5 மணியளவில் தொடங்கிய அவரது விசாரணை சுமார் மூன்று மணி நேரம் நீடித்தது. அப்போது பாலகிருஷ்ணனின் உடலில் காணப்பட்ட காயங்களின் தன்மை குறித்தும் நீதிபதி நேரில் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குச் சென்ற நீதிபதி ஆனந்தராஜா முன்னிலையில், பாலகிருஷ்ணனின் உடல் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டு உடற்கூறாய்வு செய்யப்பட்டது. மேலும், உயிரிழந்தவரின் மகன் விகாஷ், தாயார் மற்றும் உறவினர்களிடம் நீதிபதி நேரடியாக வாக்குமூலம் பெற்றார். இதன் பின்னரே பாலகிருஷ்ணனின் உடலைப் பார்வையிட அவரது குடும்பத்தினருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் முதற்கட்ட நடவடிக்கையாக, செக்கானூரணி காவல் நிலைய ஆய்வாளர் முத்து மற்றும் இரண்டு காவலர்கள் என மொத்தம் மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட லாரி ஓட்டுநர் உயிரிழந்த சம்பவத்திற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள், இந்தச் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
காவல் நிலையத்திற்குள் நடந்த உயிரிழப்பு, குடும்பத்தினரின் குற்றச்சாட்டுகள், சிசிடிவி காட்சிகள் மற்றும் நீதிபதியின் நேரடி ஆய்வு எனப் பல்வேறு கோணங்களில் இந்தச் சம்பவம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், பாலகிருஷ்ணனின் உயிரிழப்புக்கான உண்மையான காரணம் என்ன என்பது விசாரணையின் முடிவிலேயே தெரியவரும்.




You must be logged in to post a comment.