அவசர சிகிச்சைக்காக நோயாளிகளை அழைத்துச் செல்ல முடியாமல் தவிப்பு – ஜெனரேட்டர் இருந்தும் இயக்கப்படுவதில்லை என புகார்!
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 800-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து வார்டுகளுக்கும், வார்டுகளில் இருந்து எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளுக்கும் நோயாளிகள் ஸ்ட்ரெச்சர் மற்றும் வீல்சேர் மூலம் லிப்டில் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இந்த நிலையில், மருத்துவமனையில் மின்தடை ஏற்பட்டால் லிப்ட்கள் செயல்படாமல் முடங்கிவிடுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளைக்கூட பரிசோதனைக்காக அழைத்துச் செல்ல முடியாமல், மின்சாரம் வரும் வரை லிப்ட் வாசலில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
ஏற்கனவே உடல்நலக்குறைவால் அவதிப்படும் ஏழை, எளிய நோயாளிகள் அவசரப் பரிசோதனைக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பது வேதனை அளிப்பதாக நோயாளிகளின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், ஒவ்வொரு நோயாளியையும் அழைத்துச் செல்ல ஒரு பணியாளர் உடன் செல்ல வேண்டியிருப்பதால் மருத்துவமனையின் மற்ற பணிகளும் பாதிக்கப்படுகின்றன.
24 மணி நேரமும் இயங்க வேண்டிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மின்தடை ஏற்பட்டாலும் லிப்ட்கள் தொடர்ந்து இயங்கும் வகையில் அதிக திறன் கொண்ட ஜெனரேட்டர் வசதி இருந்தும், அவை முறையாக இயக்கப்படுவதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக தலையிட்டு மின்தடை நேரங்களிலும் லிப்ட்கள் தடையின்றி இயங்க ஜெனரேட்டர் வசதியை முறையாகப் பயன்படுத்த வேண்டும். நோயாளிகளின் உயிர் மற்றும் அவசர சிகிச்சையை கருத்தில் கொண்டு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பதே நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.




You must be logged in to post a comment.