2024-ல் டெண்டர் விட்டும் இதுவரை முழுமையாகப் பணி முடியவில்லை – 5 மடைகளும் முறையாகக் கட்டப்படாததால் 500 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு ஆபத்து!
ராமநாதபுரம், நவ.14:
ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா, கருங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பால்குளம் கிராமத்தில் உள்ள கண்மாயைச் சீரமைக்க கடந்த 2024-ம் ஆண்டு டெண்டர் விடப்பட்டது. ஆனால், இரண்டு ஆண்டுகள் ஆகியும் இதுவரை பணிகள் முழுமையாக முடிக்கப்படவில்லை என்று கிராம மக்களும் விவசாயிகளும் புகார் தெரிவிக்கின்றனர்.
கண்மாயை முறையாகத் தூர்வாராமல், விவசாயத்திற்குத் தேவையான 5 மடைகளையும் தரமாகக் கட்டாமல் பணிகளை அரைகுறையாக விட்டுச் சென்றுள்ளதாகக் கூறுகின்றனர். மடைகள் கட்ட வேண்டிய இடங்களில் ஆங்காங்கே கற்களைக் கொட்டிவிட்டு சென்றுள்ளதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்தக் கண்மாயை நம்பி 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களும், 150-க்கும் மேற்பட்ட குடும்பங்களும் உள்ளன. தற்போது விவசாயப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மடைகள் முறையாகக் கட்டப்படாததால் மழைக்காலத்தில் கண்மாய் நீர் வெளியேறி பயிர்கள் சேதமடையும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக கிராம மக்கள் ஒன்றுகூடி ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகளை ஆடியோ கால் மூலம் தொடர்புகொண்டு, 5 மடைகளையும் முறையாகக் கட்டாமல் விட்டது ஏன்? பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தார்களா? தரமற்ற பணிகளுக்கு யார் பொறுப்பு? என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு அதிகாரிகள் திங்கள்கிழமை நேரில் வந்து கண்மாயைப் பார்வையிடுவதாகத் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2024-ம் ஆண்டு டெண்டர் விடப்பட்ட பணிகள் 2026-ம் ஆண்டிலும் முழுமையாக முடியாதது ஏன்? அரசு ஒதுக்கிய நிதி முறையாகப் பயன்படுத்தப்பட்டதா? பணிகளின் தரத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தார்களா? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து கண்மாயைப் பார்வையிட்டு, 5 மடைகளையும் தரமாகக் கட்டி முடிக்கவும், கண்மாயை முழுமையாகச் சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் கிராம மக்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் பால்குளம் கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.




You must be logged in to post a comment.