மதுரையில் அதிர்ச்சி – காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்தவர் உயிரிழப்பு!
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக வந்த பாலகிருஷ்ணன் என்பவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு உசிலம்பட்டி அருகே தனது லாரியில் ஏற்றி வந்த ஏலக்காய் மூட்டைகள் தீப்பிடித்து எரிந்ததாக புகார் கொடுக்க அவர் காவல் நிலையம் வந்துள்ளார்.
– அந்த புகாரில் சந்தேகம் இருப்பதாகக் கருதிய போலீசார், அவரை விசாரணைக்காக அழைத்து, காவல் ஆய்வாளர் அறையில் அமர வைத்துள்ளனர்.
அதன்பின் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை பார்க்க போலீசார் வெளியே சென்றுள்ளனர். திரும்பி வந்து பார்த்தபோது, அவர் கழிவறையில் உயிரிழந்த நிலையில் இருந்தது தெரியவந்துள்ளது.
புகாரில் முரண்பாடு இருந்ததால் போலீசாரிடம் சிக்கிக் கொள்வோமோ என்ற பயத்தில் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
பாலகிருஷ்ணன் மரணம் – மதுரை மாவட்ட காவல்துறை விளக்கம்!
செக்கானூரணி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த பாலகிருஷ்ணன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மதுரை மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது பணியில் இருந்த காவல் நிலைய பொறுப்பு அதிகாரியான காவல் ஆய்வாளர் மற்றும் தொடர்புடைய காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வெளிப்படைத்தன்மையுடன், பாரபட்சமின்றி விசாரணை நடைபெறுவதை உறுதி செய்ய, இந்த சம்பவம் குறித்து நீதித்துறை நடுவர் விசாரணை நடத்தப்பட உள்ளது.
மேலும், இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட உள்ளதாகவும் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
செக்கானூரணி காவல் நிலையத்தில் உயிரிழந்த ஓட்டுநர் பாலகிருஷ்ணனின் மனைவி பரபரப்பு புகார்!
எனது கணவர் தற்கொலை செய்து கொள்ளும் நபர் அல்ல. அவர் மிகவும் தைரியமானவர். காவல் நிலையத்தில் தான் அவருக்கு ஏதோ நடந்திருக்கிறது” என கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த ஆறு மாதங்களில் நடைபெறும் ஆறாவது காவல் நிலைய மரணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.




You must be logged in to post a comment.