12 November 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வங்கி லாக்கரில் வைத்த 50 சவரன் தங்க நகைகள் மாயம்!

வங்கி லாக்கரில் வைத்த 50 சவரன் தங்க நகைகள் மாயம்!

எழுதியவர்: Baker BAker November 12, 2026, 11:11 pm

நாகர்கோவில் அருகே அதிர்ச்சி சம்பவம் – முறையான விசாரணை நடத்தவில்லை எனக் குற்றச்சாட்டு; எஸ்.பி. அலுவலகத்தில் குடும்பத்தினர் புகார்!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே மறவன்குடியிருப்பு பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 50 சவரன் தங்க நகைகள் மாயமானதாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கீழ ராமன்புதூர் பகுதியைச் சேர்ந்த அரவிந்த்குமார் என்பவர் கேரள மாநிலம் கொச்சியில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் ஒரு வயது ஆண் குழந்தையுடன் வசித்து வருகிறார். வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியூரில் இருக்க வேண்டிய சூழல் இருப்பதால், வீட்டில் தங்க நகைகளை வைத்திருப்பது பாதுகாப்பானதாக இருக்காது எனக் கருதி, தனது மனைவிக்குச் சொந்தமான 50 சவரன் தங்க நகைகளை கடந்த செப்டம்பர் மாதம் மறவன்குடியிருப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் லாக்கரில் வைத்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வீட்டில் நடைபெறவிருந்த சுப நிகழ்ச்சிக்காக நகைகளை எடுப்பதற்காக கடந்த 7-ஆம் தேதி வங்கிக்குச் சென்று லாக்கரைத் திறந்து பார்த்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த 50 சவரன் தங்க நகைகளும் மாயமாகியிருப்பதைக் கண்டு அரவிந்த்குமாரின் மனைவி அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து கணவன், மனைவி இருவரும் கோட்டாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், வழக்குப்பதிவு செய்து பல நாட்களாகியும் இதுவரை முறையான விசாரணை மேற்கொள்ளப்படவில்லை என்றும், மாயமான நகைகளை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால் அதிருப்தியடைந்த அரவிந்த்குமார் குடும்பத்தினர், மாயமான 50 சவரன் தங்க நகைகளை விரைந்து மீட்டுத்தர வேண்டும் என்றும், இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

வீட்டில் நகைகளை வைத்திருப்பதைவிட பாதுகாப்பானது என நம்பி வங்கி லாக்கரில் வைத்த நகைகளே மாயமானதாகக் கூறப்படும் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கி லாக்கரின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும், நகைகள் மாயமானது எப்படி என்பது குறித்தும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கோரிக்கையாக உள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!