கருங்கல் அருகே எதிரே அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் விபரீதம் – திருமண நிகழ்ச்சிக்குச் சென்ற சிறுமி உயிரிழப்பு; விபத்துக் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி!
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே மத்திக்கோடு பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞரான சிறுமி நந்தனா ஜெய் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
மத்திக்கோடு பகுதியைச் சேர்ந்த ஜெசின் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் உறவினரான பூதப்பாண்டியைச் சேர்ந்த சரண்யா மற்றும் அவரது இளைய மகள் நந்தனா ஜெய் ஆகியோருடன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகச் சென்றுள்ளார். சரண்யா, பாஜக தோவாளை மேற்கு ஒன்றிய மகளிரணி பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.
இவர்கள் மத்திக்கோடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே அதிவேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, அவர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் இரண்டு இருசக்கர வாகனங்களிலும் பயணித்தவர்கள் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.
விபத்தைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் விரைந்து செயல்பட்டு காயமடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சிறுமி நந்தனா ஜெய் பரிதாபமாக உயிரிழந்தார்.
பல பரதநாட்டிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது நடனத் திறமையால் பார்வையாளர்களின் பாராட்டுகளைப் பெற்ற சிறுமி நந்தனா ஜெய், விபத்தில் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கருங்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், விபத்து நடந்த விதத்தை அப்படியே வெளிப்படுத்தும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளதால் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.




You must be logged in to post a comment.