உயிரை குடிக்கும் குண்டும் குழியான நெடுஞ்சாலைகளை சீரமைக்கக்கோரி தக்கலையில் சிபிஐ(எம்) சாலை மறியல் 600 பேர் கைது!
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல ஆண்டுகளாகச் சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாகக் காணப்படும் நெடுஞ்சாலைகளால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் தினந்தோறும் கடும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.
இந்தச் சாலைகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதுடன், உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக இரவு நேரங்களிலும் மழைக்காலங்களிலும் சாலைகளில் உள்ள பள்ளங்கள் வாகன ஓட்டிகளுக்குப் பெரும் சவாலாக உள்ளன.
பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்லும் ஊழியர்கள், அலுவலகப் பணியாளர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் இந்தச் சாலைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
உரிய நேரத்திற்கு தங்களது இடங்களுக்குச் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலிலும் சாலைப் பள்ளங்களிலும் சிக்கித் தவிக்கின்றனர்.
அவசர மருத்துவத் தேவைகளுக்காக மருத்துவமனைக்குச் செல்லும் ஆம்புலன்ஸ்களுக்கும் இத்தகைய சாலைகள் இடையூறாக அமைகின்றன.
இருசக்கர வாகன ஓட்டிகள் முதல் கனரக வாகன ஓட்டிகள் வரை அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். மேலும், சாலைகளின் மோசமான நிலையால் வாகனங்களும் அடிக்கடி பழுதடையும் சூழல் ஏற்படுகிறது.
பல ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும், பொதுமக்களின் உயிருக்கும் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் அளித்து நெடுஞ்சாலைகளை உடனடியாகச் செப்பனிட வேண்டும் என்றும் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று தக்கலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் ஆர். செல்லசுவாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தை மாவட்டச் செயலாளர் தோழர் என்.எஸ். கண்ணன் தொடங்கி வைத்துப் பேசினார். போராட்டத்தை விளக்கி தோழர்கள் பெல்லார்மின், லீமாறோஸ் ஆகியோர் உரையாற்றினர்.
சாலை என்பது வெறும் போக்குவரத்துக்கான வழி மட்டுமல்ல, அது மக்களின் அன்றாட வாழ்க்கையோடும் உயிர் பாதுகாப்போடும் தொடர்புடையது.
விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்ந்த பிறகும் சீரமைப்புப் பணிகள் தாமதமாவது ஏன்? பொதுமக்களின் நீண்டகாலக் கோரிக்கைக்கு உரிய தீர்வு கிடைப்பது எப்போது? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கேள்வி எழுப்பினர்.
இந்தச் சாலை மறியல் போராட்டத்தில் 250 பெண்கள் உட்பட சுமார் 600 பேர் பங்கேற்றனர். அவர்களைப் போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்து பின்னர் விடுவிக்கப்பட்டனர்.




You must be logged in to post a comment.