5-வது ஆண்டாகத் தொடரும் மனிதநேயப் பணி – மருத்துவர்கள், பொதுமக்கள் பாராட்டு!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வரும் உறவினர்கள் அமர்ந்து பயன்பெறும் வகையில், ஹஜ் பயணிகள் வழிகாட்டு குழுவின் சார்பில் இருக்கைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
மேட்டுப்பாளையத்தில் இருந்து நடப்பாண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ள பயணிகள் ஒன்றிணைந்து, இந்த நலத்திட்ட உதவியை வழங்கினர். இதற்கான இருக்கைகளை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து ஹஜ் பயணிகள் மற்றும் வழிகாட்டு குழுவினர் கூறுகையில், ஆண்டுதோறும் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் சார்பில், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு மருத்துவமனைக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் பயன்பாட்டிற்காக இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மனிதநேயப் பணி தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது என்றனர்.
இந்நிகழ்ச்சியில் ஹஜ் பயணிகள், வழிகாட்டு குழுவினர் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டனர்.
புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கு முன்பாக, பொதுமக்களின் நலனுக்காக அரசு மருத்துவமனைக்கு உதவிக்கரம் நீட்டிய ஹஜ் பயணிகளின் இந்த மனிதநேயச் செயலை மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.




You must be logged in to post a comment.