04 November 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கனிம வள கடத்தலுக்கு குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை; புதிய எஸ்பி ஸ்டாலின் IPS உறுதி..

கனிம வள கடத்தலுக்கு குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை; புதிய எஸ்பி ஸ்டாலின் IPS உறுதி..

எழுதியவர்: Abubakker Sithik November 4, 2026, 3:11 pm

தென்காசி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக Dr.R.ஸ்டாலின் IPS இன்று (04.11.2026) பொறுப் பேற்றுக் கொண்டார். கடந்த அக்டோபர் 29, 2026 அன்று தமிழக அரசால் தென்காசி மாவட்ட புதிய எஸ்பியாக டாக்டர் ஸ்டாலின் IPS அறிவிக்கப்பட்டார். அதன்படி, தென்காசி மாவட்டத்தின் 10-வது மாவட்ட எஸ்பியாக இன்று அதிகாரப் பூர்வமாக பொறுப்பேற்றார்.

பின்னர் புதிய எஸ்.பி டாக்டர் R.ஸ்டாலின் IPS தெரிவித்ததாவது, தென்காசி மாவட்டத்தில் கனிமவள கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் அரசு உடமையாக்கப்பட்டு கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

குற்றங்களை தடுக்கும் வகையில் கிராமங்கள் தோறும் CCTV கேமராக்கள் அமைக்கப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

போதை பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க தனிக்கவனம் செலுத்தப்படும். சாலை விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய எஸ்.பி தெரிவித்தார்.

டாக்டர் ஸ்டாலின் IPS – பின்னணி மற்றும் முந்தைய பணிகள்:

2019-ஆம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்த டாக்டர் ஸ்டாலின், இதற்கு முன்பு சென்னை வடக்கு மண்டல பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவின் (EOW) துணை ஆணையராகப் பணியாற்றி வந்தார். அதற்கு முன்னதாக, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சுமார் 20 மாதங்கள் சிறப்பாகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. குமரி மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் கும்பல், ரவுடிசம் மற்றும் கேரளாவுக்குக் கடத்தப்படும் கனிம வள மாஃபியாக்கள் மீது இவர் எடுத்த அதிரடி நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

பதவியேற்பு நிகழ்வு: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், டாக்டர் ஸ்டாலின் ஐபிஎஸ் கோப்புகளில் கையெழுத்திட்டு புதிய மாவட்ட எஸ்பி-யாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவருக்கு மாவட்டத்தின் பிற உயர் காவல்துறை அதிகாரிகள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்துகளையும், வரவேற்பையும் தெரிவித்தனர்.

தென்காசி மாவட்டத்தின் புதிய எஸ்பியாக பொறுப்பேற்றுள்ள டாக்டர். ஸ்டாலின் IPS பணி சிறக்க கீழை நியூஸ் மற்றும் சத்தியப்பாதை செய்திக் குழுமம் சார்பில் வாழ்த்துகிறோம்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!