தேசியத்தையும் தெய்வீகத்தையும் பாதுகாப்பதே தேவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி” – குடியரசுத் துணைத் தலைவர் புகழாரம்!
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மலர்தூவி மரியாதை செலுத்தி வணங்கினார்.
இதனைத் தொடர்ந்து, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவு இல்லத்தைப் பார்வையிட்ட அவர், தேவரின் உறவினர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சுதந்திரப் போராட்டக் காலத்தில் மட்டுமல்லாமல், அதற்குப் பின்னரும் தொடர்ந்து சமுதாயத்திற்காக உழைப்பதையே தனது வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டவர். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மனதில் இடம்பிடித்ததுடன், அவரைத் தனது தலைவராக ஏற்றுக்கொண்டு, இந்திய தேசத்தின் தேசிய எழுச்சிக்கும், தமிழ் மண்ணின் தெய்வீக எழுச்சிக்கும் தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர்.
தனது தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு எந்தவிதமான துரோகத்தையும் செய்ய விரும்பாதவர். அவர் மட்டும் சில அரசியல் சமரசங்களைச் செய்திருந்தால், தமிழகத்தின் முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்திருப்பார். ஆனால், தனது கொள்கைகளுக்கு எதிராக எந்தக் காலத்திலும் எந்தவிதமான சமரசத்தையும் செய்துகொள்ளாதவர்.
நேர்மை, தவம், கண்ணியம் ஆகியவற்றைத் தனது வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்து வாழ்ந்தவர். தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகத் துணிச்சலுடன் குரல் கொடுத்தவர்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தாழ்த்தப்பட்ட மக்களின் ஆலயப் பிரவேசத்திற்கு எதிர்ப்புகள் எழுந்தபோது, யார் தடுத்தாலும் அவர்களுக்காக முன்னின்று போராட்டத்தை நடத்துவேன் என்று உறுதியளித்த பிறகே அந்த ஆலயப் பிரவேசம் வெற்றிகரமாக நடைபெற்றது. மேலும், தனது சொத்தில் பெரும்பகுதியைத் தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக வழங்கியவர்.
இத்தகைய மகத்தான தேசியத் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறப்பும் இறப்பும் ஒரே நாளில் அமைந்திருப்பது, அவர் ஒரு மகா சித்தபுருஷர் என்பதை உணர்த்துகிறது.
அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி என்பது, இந்தத் தமிழ் மண்ணில் தேசியத்தையும் தெய்வீகத்தையும் என்றென்றும் மங்காமல் பாதுகாப்பதே ஆகும். அவருக்கு அஞ்சலி செலுத்துவது இந்தியா முழுவதும் வாழும் மக்களின் கடமையாகும். உலகம் உள்ளவரை அவரது புகழ் இந்த மண்ணில் நிலைத்திருக்கும்.
இவ்வாறு குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.




You must be logged in to post a comment.