அமைச்சர்கள் வழங்கினர் – மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், பசும்பொன்னில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது பிறந்தநாள் விழா மற்றும் 64-வது குருபூஜையை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 194 பயனாளிகளுக்கு ரூ.79 லட்சத்து 70 ஆயிரத்து 50 மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
விழாவையொட்டி, பசும்பொன்னில் அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ. மதன் ராஜா, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு. வே.க. ராஜீவ், மாவட்ட ஆட்சித்தலைவர் மா. சிவகுரு பிரபாகரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கபாண்டி (மதுரை மேற்கு), எம்.எம். கோபிசன் (மதுரை தெற்கு), எம்.வி. கருப்பையா (சோழவந்தான்), ஏ. குழந்தைராணி நாச்சியார் (சிவகங்கை), டி. இளங்கோவன் (மானாமதுரை), ஆர். சீனிவாச சேதுபதி (திருப்பத்தூர்) ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கலையரங்கத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர்கள் தேவர் திருமகனாரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 26 பயனாளிகளுக்கு ரூ.26 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், 5 பயனாளிகளுக்கு உட்பிரிவு பட்டா மாறுதல்கள், 84 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள், 10 பயனாளிகளுக்கு உழவர் அட்டைகள், 3 பயனாளிகளுக்கு ரூ.30 ஆயிரம் திருமண உதவித்தொகை, 3 பயனாளிகளுக்கு ரூ.60 ஆயிரம் இறப்பு நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டன.
மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான மகளிர் சுயஉதவிக்குழுக் கடன் உதவிகளும், வேளாண்மைத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.85,833 மதிப்பிலான தெளிப்பு நீர் பாசனக் கருவிகளும், 5 பயனாளிகளுக்கு ரூ.1,94,217 மதிப்பிலான மழைத்தூவான் கருவிகளும் வழங்கப்பட்டன.
மேலும், கூட்டுறவுத்துறை சார்பில் 48 பயனாளிகளுக்கு ரூ.48 லட்சம் மதிப்பிலான மகளிர் சுயஉதவிக்குழுக் கடன் உதவிகள் வழங்கப்பட்டன.
இவ்வாறு பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் மொத்தம் 194 பயனாளிகளுக்கு ரூ.79,70,050 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் சி.டி.ஆர். நிர்மல் குமார், பெ. மதன் ராஜா, மரு. வே.க. ராஜீவ் ஆகியோர் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா. சிவகுரு பிரபாகரன், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




You must be logged in to post a comment.