மாவட்ட ஆளுநர் வருகை விழாவில் கல்வி, மருத்துவம், சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டங்கள் தொடக்கம்!
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தில் ரோட்டரி மாவட்டம் 3203-ன் கீழ் செயல்பட்டு வரும் ரோட்டரி கிளப் ஆஃப் பெரியநாயக்கன்பாளையம் நார்த் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆளுநர் வருகை மற்றும் பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் ரோட்டரி மாவட்ட ஆளுநர் ரோட்டேரியன் டி.எம். கே. பூபதி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, பல்வேறு சமூக நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
இதன்படி, அரசுப் பள்ளிகளில் நவீன கழிவறை வசதிகள் ஏற்படுத்துதல், புற்றுநோய் சிகிச்சை மையம் சார்ந்த மருத்துவ உதவிகள் வழங்குதல், ஏழை எளிய மாணவ, மாணவிகளின் கல்வி முன்னேற்றத்திற்காக கல்வி உதவித்தொகை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் பறவைகளுக்கான கூடுகள் அமைத்தல் மற்றும் அவற்றைப் பராமரிப்பதற்கான உதவிகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் ரோட்டேரியன் முகமது ஹனீப், செயலாளர் ரோட்டேரியன் ராஜசேகர், பொருளாளர் ரோட்டேரியன் மகேந்திரன் மற்றும் மாவட்ட ரோட்டரி நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
சமூகத்தின் பல்வேறு தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் கல்வி, மருத்துவம், சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறைகளில் ரோட்டரி சங்கம் தொடர்ந்து சேவையாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.




You must be logged in to post a comment.