சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர் மீது நடவடிக்கை – பைக் சாகசங்களில் ஈடுபட்டால் வாகனங்கள் பறிமுதல்: காவல்துறை எச்சரிக்கை!
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் தீபாவளிப் பண்டிகையை பொதுமக்கள் விபத்துகளின்றி பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வகையில் காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ. பவன் குமார் ரெட்டி உத்தரவின்பேரில், மேட்டுப்பாளையம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் பாஸ்கர் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் ஞானசேகர் தலைமையில் போலீசார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம், கடைவீதிகள், வணிக வளாகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சீருடை மற்றும் சாதாரண உடையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி, ஓட்டுநர் உரிமம் இல்லாத சிறுவர்களிடம் பெற்றோர் இருசக்கர வாகனங்களை வழங்கக்கூடாது என்றும், சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். மேலும், சாலைகளில் அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், பைக் சாகசங்களில் ஈடுபடுதல் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவோர் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் தேவையின்றி பொது இடங்களில் சுற்றித்திரிவோர் கண்காணிக்கப்பட்டு, சந்தேகத்திற்கிடமான நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைவீதிகளில் பொருட்கள் வாங்கச் செல்லும் பொதுமக்கள் தங்களது பணம், நகை உள்ளிட்ட உடமைகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். கூட்ட நெரிசலில் குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பட்டாசு வெடிக்கும்போது அரசு நிர்ணயித்துள்ள நேரக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும். குழந்தைகள் பெரியவர்களின் கண்காணிப்பில் பட்டாசு வெடிக்க வேண்டும். மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், பெட்ரோல் பங்க்குகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களின் அருகே பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். முன்னெச்சரிக்கையாக தண்ணீர் மற்றும் மணல் ஆகியவற்றை அருகில் வைத்திருக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அவசர உதவிக்கு காவல்துறை 100, தீயணைப்புத் துறை 101, ஆம்புலன்ஸ் 108 மற்றும் மேட்டுப்பாளையம் காவல் நிலையம் 04254-222222 ஆகிய எண்களைத் தொடர்புகொள்ளலாம்.
பொதுமக்கள் காவல்துறையின் அறிவுறுத்தல்களையும் பாதுகாப்பு விதிமுறைகளையும் முறையாகப் பின்பற்றி, விபத்துகள் இல்லாத பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என மேட்டுப்பாளையம் உட்கோட்ட காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.




You must be logged in to post a comment.