30 October 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவாடானை அருகே வயல்வெளியில் புகுந்த 25-க்கும் மேற்பட்ட புள்ளிமான்கள்!

திருவாடானை அருகே வயல்வெளியில் புகுந்த 25-க்கும் மேற்பட்ட புள்ளிமான்கள்!

எழுதியவர்: Baker BAker October 29, 2026, 11:45 pm

தேசிய நெடுஞ்சாலையில் விபத்து அபாயம் – வனவிலங்குகளைப் பாதுகாக்க பொதுமக்கள் கோரிக்கை!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருச்சி–ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோணி கிராமத்தின் அருகே வயல்வெளிப் பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட புள்ளிமான்கள் கூட்டம் கூட்டமாக வந்து பயிர்களை மேய்ந்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தையும், வனவிலங்குகளின் பாதுகாப்பு குறித்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் கூறுகையில், இப்பகுதியில் உள்ள கண்மாய்களுக்குத் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதாலும், கருவேல மரங்களை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாலும், மான்கள் தங்களின் வாழ்விடங்களிலிருந்து வெளியேறி வயல்வெளிகள் மற்றும் சாலையோரப் பகுதிகளுக்கு வருவதாகத் தெரிகிறது.

உணவு மற்றும் பாதுகாப்பைத் தேடி சாலையோரப் பகுதிகளுக்கு வரும் புள்ளிமான்கள், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்கும்போது வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் அபாயம் நிலவுகிறது. மேலும், குடியிருப்புகள் மற்றும் வயல்வெளிகளுக்குள் வரும் மான்களைத் தெருநாய்கள் துரத்திக் கடிப்பதால் அவற்றின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

இதனால், வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள பகுதிகளில் அவற்றைப் பாதுகாக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மான்கள் அதிகம் நடமாடும் தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் அறிவிப்புப் பலகைகள் அமைக்க வேண்டும். மேலும், வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், வனத்துறையினர் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தி, மான்கள் பாதுகாப்பாக நடமாடவும் தங்களது வாழ்விடங்களுக்குத் திரும்பவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!