30 October 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரசின் நலத் திட்டங்களை கடைகோடி மக்களுக்கும் கொண்டு சேர்ப்பேன்; புதிய ஆட்சியர் உறுதி..

அரசின் நலத் திட்டங்களை கடைகோடி மக்களுக்கும் கொண்டு சேர்ப்பேன்; புதிய ஆட்சியர் உறுதி..

எழுதியவர்: Abubakker Sithik October 30, 2026, 6:25 pm

அரசின் அனைத்து திட்டங்களையும், நலத்திட்டங்களையும் சமுதாயத்தில் உள்ள அனைத்து கடைகோடி மக்களுக்கும் கொண்டு சேர்ப்பதே தனது முக்கிய நோக்கமாகும் என தென்காசி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட டாக்டர். மோனிகா ரானா தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக டாக்டர்.மோனிகா ரானா, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 29.10.2026 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்றபின் மாவட்ட ஆட்சியர் மரு.மோனிகா ரானா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

தென்காசி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. தென்காசி மாவட்ட மக்களுக்கு சேவை செய்ய இந்த வாய்ப்பு வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். நம் அரசாங்கத்தின் அனைத்து திட்டங்களையும், நலத் திட்டங்களையும் சமுதாயத்தில் உள்ள அனைத்து கடைகோடி மக்களுக்கும் கொண்டு சேர்ப்பது எனது முக்கிய நோக்கமாகும். அதற்காக நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் மரு.மோனிகா ரானா, தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.வீராசாமி. திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, முனைவர் ஆ.ரா.சிவராமன், திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மரு.தண்டபாணி மற்றும் அரசு அலுவலகர்கள் பலர் உடன் உள்ளனர்.

டாக்டர் மோனிகா ராணா ஐஏஎஸ் பின்னணி மற்றும் பணிகள்:

பிரிவு மற்றும் கல்வி: 2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான இவர், நிர்வாகப் பணிகளில் தனக்கென தனி முத்திரை பதித்தவர்.

திருநெல்வேலி மாநகராட்சிப் பணிகள்: திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளராகப் பொறுப்பு வகித்த காலத்தில், தூய்மைப் பணிகள், மாநகர உள்கட்டமைப்பு நவீனமயமாக்கல், குடிநீர் விநியோகம் மற்றும் வரி வசூல் முறைப்படுத்துதல் ஆகியவற்றில் சிறப்பான சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.

களப்பணி அணுகுமுறை: பொது மக்களின் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண்பது, கள ஆய்வுகளில் நேரடியாக ஈடுபட்டு வளர்ச்சித் திட்டங்களை முடுக்கி விடுவது ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்துபவர் எனப் பெயர் பெற்றவர்.

தென்காசி மாவட்ட மக்கள் சமூக ஆர்வலர்கள் நம்பிக்கை: கனிம வளங்கள் பாதுகாப்பு, மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தின் விவசாய மேம்பாடு, உலகப் புகழ்பெற்ற குற்றால சுற்றுலாத்தலக் கட்டமைப்பு விரிவாக்கம், நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் ஊரக வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது போன்ற முக்கிய விவகாரங்களில் புதிய ஆட்சியரின் கீழ் கூடுதல் வேகம் கிடைக்கும் என தென்காசி மாவட்ட மக்களும் சமூக ஆர்வலர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!