4 டிஐஜி, 30 எஸ்.பி., 80 டிஎஸ்பி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழாவையொட்டி 10,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ் தெரிவித்துள்ளார்.
பசும்பொன்னில் வரும் 30-ஆம் தேதி நடைபெறவுள்ள முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜை விழாவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்று மரியாதை செலுத்த உள்ளனர்.
இதையொட்டி பசும்பொன் மற்றும் மாவட்டத்தின் முக்கியப் பகுதிகளில் கண்காணிப்புக் கோபுரங்கள் (வாட்சிங் டவர்கள்) அமைக்கப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். விழாவிற்கு வருகை தரும் பொதுமக்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ் கூறுகையில், விழாவையொட்டி சுமார் 10,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 4 டிஐஜி, 30 எஸ்.பி., 80 டிஎஸ்பி மற்றும் 35 கூடுதல் எஸ்.பி.க்கள் தலைமையில் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், ட்ரோன்கள் மூலம் நேரடி கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதுடன், நகரும் கேமராக்கள் (மூவிங் கேமரா) மூலமாகவும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பசும்பொன் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என அவர் தெரிவித்தார்.
குருபூஜை விழாவில் திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும் வருகை தர உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் பசும்பொன் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விழா அமைதியாக நடைபெறவும், பொதுமக்கள் எவ்வித இடையூறுமின்றி வந்து செல்லவும் காவல்துறையினர் விரிவான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




You must be logged in to post a comment.