குண்டும் குழியுமான சாலையைச் சீரமைக்கக் கோரிக்கை – பாதாளச் சாக்கடை மேன்ஹோல்களைச் சீரமைப்பதாகக் கூறி 3 மாதங்களாகியும் நடவடிக்கை இல்லை என மற்றொரு கவுன்சிலர் புகார்!
ராமநாதபுரம் நகர்மன்றக் கூட்டத்தில், குண்டும் குழியுமான சாலையைச் சீரமைக்க வலியுறுத்தி தவெக கவுன்சிலர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதே கூட்டத்தில், பாதாளச் சாக்கடை மேன்ஹோல்களைச் சீரமைப்பதில் நகராட்சி அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக திமுக கவுன்சிலரும் குற்றம்சாட்டினார்.
ராமநாதபுரம் நகர்மன்றத் தலைவர் கார்மேகம் தலைமையில் நகர்மன்றக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு வார்டுகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள் பங்கேற்று, தங்கள் பகுதிகளில் நிலவும் அடிப்படை வசதிகள் குறித்த குறைகளை எடுத்துரைத்தனர்.
கூட்டத்தின்போது, 12-வது வார்டு தவெக கவுன்சிலர் கமலக்கண்ணன் திடீரென எழுந்து, கூட்ட அரங்கில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கேணிக்கரையில் இருந்து ஓம்சக்தி நகர் வரை செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாகக் காணப்படுகிறது. இதனைச் சீரமைக்கக் கோரி நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.
மேலும், இந்தச் சாலையைச் சுற்றி மூன்று முக்கியப் பள்ளிகள் உள்ளதாகவும், அப்பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும், ஏராளமான மாணவ, மாணவிகள் தினமும் இந்தச் சாலையைப் பயன்படுத்தி பள்ளிகளுக்குச் சென்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சாலை சீரமைக்கப்படாததால் பொதுமக்களும் பள்ளி மாணவர்களும் தொடர்ந்து சிரமங்களைச் சந்தித்து வருவதாகக் கூறிய அவர், நகராட்சி நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து பேசிய திமுக கவுன்சிலர் காளிதாஸ், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்திலேயே மோசமான நிலையில் உள்ள பாதாளச் சாக்கடை மேன்ஹோல்களைச் சீரமைப்பதாக நகராட்சி அதிகாரிகள் உறுதியளித்ததாகக் குறிப்பிட்டார்.
ஆனால், மூன்று மாதங்களுக்கும் மேலாகியும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், நகராட்சியின் பொறியியல் பிரிவு அதிகாரிகள் தங்களது பணிகளை முறையாக மேற்கொள்வதில்லை என்றும், லட்சக்கணக்கில் சம்பளம் பெற்றும் பொதுமக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் இருப்பதாகவும் அவர் விமர்சித்தார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஒருபுறம் சாலைகள் சேதமடைந்து பொதுமக்களும் மாணவர்களும் பாதிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ள நிலையில், மறுபுறம் பாதாளச் சாக்கடை மேன்ஹோல்களைச் சீரமைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் கவுன்சிலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
நகர்மன்றக் கூட்டத்திலேயே கவுன்சிலர்கள் போராட்டத்திலும் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபடும் அளவுக்கு பிரச்சினைகள் எழுந்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து, சாலை சீரமைப்பு மற்றும் பாதாளச் சாக்கடைப் பணிகளை விரைந்து முடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.




You must be logged in to post a comment.