ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன்னில், விடுதலைப் போராட்ட வீரரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவரின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜை விழா இன்று யாகசாலை பூஜைகளுடன் கோலாகலமாகத் தொடங்குகிறது.
வரும் 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் இவ்விழாவை முன்னிட்டு, பசும்பொன்னில் ஆன்மிக நிகழ்ச்சிகள், அரசியல் தலைவர்களின் மரியாதை நிகழ்வுகள் மற்றும் அரசு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன்னில், விடுதலைப் போராட்ட வீரரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவரின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜை விழா 30-ம் தேதி குருபூஜை அரசு விழாவாகவும் நடைபெறுகிறது.
இவ்விழாவில் துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேமுதிக, மதிமுக, காங்கிரஸ், பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள், பல்வேறு சமுதாய அமைப்பினர், விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்களும் பங்கேற்க உள்ளனர்.
குருபூஜை விழாவுக்கு வருகை தரும் பொதுமக்களின் வசதிக்காக அரசியல் கட்சிகள் மற்றும் சமுதாய அமைப்புகள் சார்பில் பிரம்மாண்டமான அன்னதானக் கூடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
குருபூஜை விழாவை முன்னிட்டு, தமிழக காவல்துறை ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி தலைமையிலான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விழாவுக்கு வருகை தரும் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பசும்பொன்னில் மூன்று நாட்கள் நடைபெறும் இவ்விழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளதுடன், பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வருகை தரத் தொடங்கியுள்ளனர்.




You must be logged in to post a comment.