பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மின்வாரிய அதிகாரிகள் மீது கிராம மக்கள் குற்றச்சாட்டு!
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தாழ்வாகச் சென்ற மின்கம்பி உரசியதில் பத்தாம் வகுப்பு மாணவர் உட்பட இருவர் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
திருவாடானை தாலுகா, மல்லனூர் கிராமத்தில் உள்ள மின்மாற்றி அருகேயுள்ள வயல்வெளியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பழனியின் மகனான பத்தாம் வகுப்பு மாணவர் கவிபிரியன், அப்பகுதியில் உள்ள பால் பண்ணைக்குப் பால் ஊற்றுவதற்காகச் சென்றுள்ளார்.
அப்போது அங்கு மிகவும் தாழ்வாகச் சென்ற மின்கம்பி எதிர்பாராதவிதமாக மாணவரின் தலையில் உரசியதாகக் கூறப்படுகிறது. இதில் மின்சாரம் தாக்கி மாணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தவித்துள்ளார்.
இதைக் கண்ட பாகனூரைச் சேர்ந்த சுப்பிரமணியின் மகன் செல்வராஜ், மாணவரைக் காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது அவரும் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தார். இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து அப்பகுதி மக்கள் விரைந்து செயல்பட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் திருவாடானை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக இருவரும் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மல்லனூர் பகுதியில் ஒரு மின்கம்பத்திற்கும் மற்றொரு மின்கம்பத்திற்கும் இடையே அதிக இடைவெளி இருப்பதால், மின்கம்பிகள் தொய்வடைந்து மிகவும் தாழ்வாகச் செல்வதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், அதிகாரிகளின் அலட்சியமே இந்த விபத்துக்குக் காரணம் என்றும் கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மின்கம்பிகள் தாழ்வாகச் செல்லும் பகுதிகளில் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, ஆபத்தான மின்கம்பிகளைச் சீரமைக்க வேண்டும். தேவைப்படும் இடங்களில் புதிய மின்கம்பங்களை அமைத்து, இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நிகழாமல் தடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், ஏற்கெனவே அளிக்கப்பட்ட புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது குறித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
மின்சாரம் தாக்கி இருவர் படுகாயமடைந்த சம்பவத்தால் அவர்களது குடும்பத்தினரும் கிராம மக்களும் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.




You must be logged in to post a comment.