30 October 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வயல்வெளியில் அணிவகுத்த 25-க்கும் மேற்பட்ட புள்ளிமான்கள்! இயற்கையின் அழகா… உயிருக்கு ஆபத்தா.!

வயல்வெளியில் அணிவகுத்த 25-க்கும் மேற்பட்ட புள்ளிமான்கள்! இயற்கையின் அழகா… உயிருக்கு ஆபத்தா.!

எழுதியவர்: Baker BAker October 29, 2026, 11:17 pm

கோணி கிராமத்தில் வியப்பூட்டும் மான்கள் கூட்டம்! தேசிய நெடுஞ்சாலையில் விபத்து அபாயம் – வனவிலங்குகளைக் காக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமா?

திருவாடானை: வயல்வெளியில் கூட்டம் கூட்டமாக உலா வரும் புள்ளிமான்கள்… பசுமையான பயிர்களுக்கு நடுவே துள்ளித் திரியும் மான்களின் அழகிய காட்சி… பார்ப்பவர்களின் கண்களுக்கு விருந்தாக இருந்தாலும், இந்த அழகிய வனவிலங்குகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருச்சி–ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோணி கிராமத்தின் அருகே வயல்வெளிகளில் 25-க்கும் மேற்பட்ட புள்ளிமான்கள் கூட்டமாக வந்து பயிர்களை மேய்ந்து சென்றுள்ளன. இந்தக் காட்சி அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியதுடன், மான்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் அதிகரித்துள்ளது.

அப்பகுதியில் உள்ள கண்மாய்களில் தண்ணீர் வரத்து அதிகரித்திருப்பதும், கருவேல மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதும் மான்களின் நடமாட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர். இதனால், தங்களின் இயல்பான வாழ்விடங்களிலிருந்து வெளியேறும் மான்கள் உணவு தேடி வயல்வெளிகளுக்கும் சாலையோரப் பகுதிகளுக்கும் வருவதாகக் கூறப்படுகிறது.

இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்கும் மான்கள் வாகனங்களில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி, கிராமங்களுக்குள் வரும் மான்களைத் தெருநாய்கள் துரத்திக் கடிப்பதால் அவற்றின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது.

இயற்கையின் பொக்கிஷங்களான இந்த வாயில்லா ஜீவன்கள், மனிதர்களின் கவனக்குறைவாலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததாலும் உயிரிழக்க வேண்டுமா? என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் எழுப்புகின்றனர்.

கோணி கிராமம் மற்றும் மான்கள் நடமாட்டம் அதிகமுள்ள தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் வனவிலங்குகள் கடந்து செல்லும் இடங்களைக் கண்டறிந்து எச்சரிக்கைப் பலகைகள் அமைக்க வேண்டும். வாகன ஓட்டிகள் வேகத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், வனத்துறையினர் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.

மேலும், வயல்வெளிகளுக்குள் வரும் மான்கள் பாதுகாப்பாகத் தங்களது வாழ்விடங்களுக்குத் திரும்புவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மான்கள் வயல்வெளியில் துள்ளித் திரியும் காட்சி நாளையும் தொடர வேண்டும்; அவை சாலைகளில் உயிரிழக்கும் செய்தியாக மாறிவிடக் கூடாது!

வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகமும் வனத்துறையும் உடனடியாகக் கவனம் செலுத்துமா? என்பதே இயற்கை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!