30 October 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வெற்றிப் பயணம் திட்டம் இருந்தும் பயனில்லை; பேருந்துக்காகக் காத்திருக்கும் கல்லூரி மாணவ மாணவிகள்!”

வெற்றிப் பயணம் திட்டம் இருந்தும் பயனில்லை; பேருந்துக்காகக் காத்திருக்கும் கல்லூரி மாணவ மாணவிகள்!”

எழுதியவர்: Baker BAker October 29, 2026, 11:07 pm

ராமநாதபுரம் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சேதுபதி அரசு கலைக் கல்லூரி நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்காமல் செல்வதாகப் புகார்! படிக்கட்டில் தொங்கிச் செல்லும் அவலம்

 ராமநாதபுரம் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சேதுபதி அரசு கலைக் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள், அரசு பேருந்துகள் கல்லூரி நிறுத்தத்தில் முறையாக நிற்காமல் செல்வதால் தினந்தோறும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதைத் தடுக்க, உரிய நேரத்தில் பேருந்துகள் நின்று செல்ல மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் இக்கல்லூரியில் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் அரசு பேருந்துகளையே நம்பியுள்ளனர். ஆனால், காலை கல்லூரிக்குச் செல்லும் நேரத்திலும், மாலை கல்லூரி முடிந்து வீடு திரும்பும் நேரத்திலும் போதிய பேருந்துகள் கிடைப்பதில்லை என்றும், தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் பேருந்துகள் கல்லூரி நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதாகவும் மாணவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதனால், நீண்ட நேரம் பேருந்துக்காகக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. பேருந்துகள் கிடைத்தாலும் அதிக கூட்டம் காரணமாக அனைவராலும் ஏறிச் செல்ல முடிவதில்லை. சில நேரங்களில் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள வேண்டிய சூழலும் ஏற்படுவதாக மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஒருபுறம் குறித்த நேரத்தில் கல்லூரிக்குச் செல்ல முடியாத கவலை; மறுபுறம் வகுப்புகளைத் தவறவிட்டு கல்வி பாதிக்கப்படுமோ என்ற அச்சம் என மாணவ, மாணவிகள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக, தொலைதூரக் கிராமங்களில் இருந்து வரும் மாணவிகள், போதிய பேருந்து வசதி இல்லாததால் கூடுதல் சிரமங்களைச் சந்திப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

பெண்களுக்கான வெற்றி பயணத் திட்டம் நடைமுறையில் இருந்தாலும், பேருந்துகள் முறையான நேரத்தில் கிடைக்காவிட்டால் அந்தத் திட்டத்தின் பயனை எவ்வாறு முழுமையாகப் பெற முடியும் என மாணவிகள் கேள்வி எழுப்புகின்றனர். கட்டணமில்லாப் பயணம் மட்டுமின்றி, பாதுகாப்பான பயணமும், உரிய நேரத்தில் கல்லூரிக்குச் சென்று திரும்புவதற்கான போக்குவரத்து வசதியும் உறுதி செய்யப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

எனவே, ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகமும், அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளும் மாணவ, மாணவிகளின் கோரிக்கையைப் பரிசீலித்து, காலை மற்றும் மாலை கல்லூரி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும். ராமநாதபுரம் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் அரசு பேருந்துகள் சேதுபதி அரசு கலைக் கல்லூரி நிறுத்தத்தில் முறையாக நின்று, காத்திருக்கும் அனைத்து மாணவ, மாணவிகளும் பாதுகாப்பாக ஏறிச் செல்லும் வகையில் உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

மேலும், கல்லூரி நேரத்திற்கேற்ப பேருந்துகளின் வருகை மற்றும் புறப்படும் நேரங்களை முறைப்படுத்தி, மாணவர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதையும், பேருந்துகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்வதையும் தடுக்க வேண்டும் என்பதே மாணவ, மாணவிகளின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!