ஏழை எளிய குடும்பங்களின் இல்லங்களில் தீப ஒளி ஏற்றும் ‘நம்ம மேட்டுப்பாளையம்’ அமைப்பு!
தொடர்ந்து 5-ஆம் ஆண்டாக தீபாவளி நலத்திட்டம் – புத்தாடை, மளிகைப் பொருட்கள், இனிப்பு வழங்க பொதுமக்களுக்கு அழைப்பு!
தீபாவளிப் பண்டிகையை ஏழை எளிய மக்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், ஆதரவற்ற முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளிம்புநிலை குடும்பங்களுக்கு புத்தாடைகள், அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்க ‘நம்ம மேட்டுப்பாளையம் சமூக நலக் குழு’ சார்பில் தொடர்ந்து 5-ஆம் ஆண்டாக நற்பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தீபாவளிப் பண்டிகை என்றாலே புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் என மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது வழக்கம். ஆனால், பொருளாதார வசதியின்றி அன்றாட வாழ்க்கையை நடத்தவே சிரமப்படும் பல ஏழை எளிய குடும்பங்களுக்கு பண்டிகையைக் கொண்டாடுவது எட்டாக்கனியாக உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, அத்தகைய குடும்பங்களின் துயரைத் துடைத்து அவர்களது இல்லங்களிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில், ‘எல்லோருக்கும் இனிய தீபாவளி’ என்ற முழக்கத்துடன் இக்குழு கடந்த நான்கு ஆண்டுகளாகத் தொடர்ந்து சேவையாற்றி வருகிறது.
இதுவரை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் பங்களிப்புடன் நூற்றுக் கணக்கான குடும்பங்களுக்கு புத்தாடைகள், மளிகைப் பொருட்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டும் மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொருளாதார நெருக்கடியால் தீபாவளியைக் கொண்டாட முடியாமல் தவிக்கும் குடும்பங்களை அடையாளம் கண்டு உதவிகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, பயனாளிகளுக்குப் புத்தாடைகள், அத்தியாவசிய மளிகைப் பொருட்கள், காய்கறித் தொகுப்புகள் மற்றும் தீபாவளி இனிப்பு, கார வகைகள் வழங்கப்பட உள்ளன.
இந்த மனிதநேயப் பணியைச் சிறப்பாகச் செயல்படுத்த பொதுமக்கள், வணிகர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் கொடையாளர்கள் தங்களால் இயன்ற நிதியுதவியையோ அத்தியாவசியப் பொருட்களையோ வழங்கி ஒத்துழைக்குமாறு அமைப்பின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நிதியுதவி வழங்க விரும்புவோர் எஸ். பாஷா (PhonePe: 9843959910), பேராசிரியர் எம். ஜெய்குமார் (Google Pay: 9092908425) ஆகியோரைத் தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நற்பணிக்கு வழங்கப்படும் நிதி மற்றும் பொருட்களின் வரவு-செலவு விவரங்கள் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படும் என்றும், உதவி பெறும் குடும்பங்களின் சுயமரியாதையைப் பாதுகாக்கும் வகையில் அவர்களது புகைப்படங்கள் மற்றும் அடையாள விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்பட மாட்டாது என்றும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
“நாம் கொண்டாடும் தீபாவளியை விட, பிறரையும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வைப்பதே உண்மையான மகிழ்ச்சி” என்ற உயரிய நோக்கில் நடைபெறும் இம்முயற்சிக்கு பொதுமக்கள் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கி, ஏழை எளிய குடும்பங்களின் இல்லங்களிலும் தீப ஒளி ஏற்ற உதவ வேண்டும் என அமைப்பினர் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.




You must be logged in to post a comment.