குற்றாலம் பேரருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிப் பகுதிகளிலும் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டிய ராஜா, முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து தென்காசி மாவட்டம் திப்பணம்பட்டி பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா முதல் அமைச்சரின் தனிப்பிரிவிற்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது:
குற்றாலம் அருவிப் பகுதிகளை சுற்றியுள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள், தட்டுகள், ஸ்பூன்கள், ஸ்ட்ராக்கள் உள்ளிட்ட பொருட்களும், குறிப்பாக ஒரு லிட்டர் மற்றும் அதற்கு குறைவான அளவிலான பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களும் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. சுற்றுலா பயணிகள் பயன்படுத்தி விட்டு வீசும் பிளாஸ்டிக் பொருட்கள் அருவிகள், நீரோடைகள், வனப் பகுதிகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள இயற்கைச் சூழலில் சேர்வதால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் நீர்நிலைகளில் கலந்து நீரின் தரத்தையும், வன விலங்குகள் மற்றும் பறவைகளின் வாழ்விடங்களையும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே பழைய குற்றாலம், குற்றாலம், ஐந்தருவி, உள்ளிட்ட அனைத்து அருவிப் பகுதிகளிலும் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் விற்பனைக்கு முழுமையான தடை விதிக்க வேண்டும். உள்ளூர் பொதுமக்கள், வணிகர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் சமூக அமைப்புகளுடன் இணைந்து “பிளாஸ்டிக் இல்லா குற்றாலம்” என்ற நடவடிக்கைகள் சுற்றுச் சூழலை விழிப்புணர்வு இயக்கத்தை நடத்த வேண்டும். இத்தகைய நடவடிக்கை குற்றாலம் மற்றும் தென்காசி மாவட்டத்தின் இயற்கை அழகையும், சுற்றுச்சூழலையும் நீண்ட காலத்திற்கு பாதுகாக்க உதவும்.
எனவே, பொதுமக்கள் மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் நீண்டகால கோரிக்கையை கருத்தில் கொண்டு, தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள அனைத்து அருவிப் பகுதிகளிலும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களின் விற்பனைக்கு முழுமையான தடைவிதித்து, குற்றாலத்தை பிளாஸ்டிக் இல்லாத சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கும், குற்றாலம் பகுதியின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சமூக ஆர்வலர் பாண்டியராஜா மனுவில் தெரிவித்துள்ளார்.




You must be logged in to post a comment.