திருநெல்வேலி மாவட்டம் பணகுடி திரு இருதய மேல்நிலைப் பள்ளி விதைப் பந்துகள் தயாரிப்பில் லட்சம் எண்ணிக்கையை தாண்டி சாதனை புரிந்துள்ளது. பணகுடி திரு இருதய பள்ளியை நிர்வகிப்பது அருட் சகோதரர்கள் ஆவர். 1350 மாணவ மாணவியர் படிக்கும் இப்பள்ளியில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட விதைப் பந்துகள் தயாரிக்கப்பட்டன. நிகழ்விற்கு தலைமையாசிரியர் அருட் சகோதரர் முனைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். பசுமைப் படை பொறுப்பு ஆசிரியைகள் பீனா, ஜெயா, சகாய ஜெனிபர், அகிலா, மஞ்சு ரேகா முன்னிலை வகித்தனர். நாட்டு நல பணித்திட்ட அலுவலர் ஆனந்த் வரவேற்றார்.


ஒரு கோடி விதைப்பந்து இயக்கம்” என்னும் முழக்கத்தோடு தமிழகம் முழுவதும் பயணித்து வரும் விதைப்பந்து பிரச்சாரகர் வெங்காடம்பட்டி பூ. திருமாறன் விதைப்பந்து தயாரிப்பை துவக்கி வைத்து பேசினார். மேலும் 1400 பேருக்கும் பாராட்டுப் பத்திரங்களை திருமாறன் வழங்கினார். பள்ளி விளையாட்டு மைதானத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த செம்மண் மற்றும் களிமண்ணில் மாணவ மாணவியர் உற்சாகமாக விதைப் பந்துகள் செய்து குவித்தனர். வகுப்பு தோறும் “விதைப் பெட்டி” வைக்கப்பட்டு 10 நாட்களாக விதைகள் சேகரிக்கப்பட்டன.
புளி, வேம்பு விதைகள் மூடைக் கணக்கில் தயாராகின. உள்ளூர் பிரமுகர்கள் விதைப்பந்து தயாரிப்பிற்கான மண்ணை ஏற்பாடு செய்து கொடுத்தது பாராட்டுப் பெற்றது. மாணவ மாணவியர் கொண்டு வந்து குவித்த விதைகள் போக, ஆசிரியர்களும் விதைகளை பள்ளிக்கு வழங்கினர். பணகுடியில் விதைப்பந்து தயாரிப்பை அனைவரும் கொண்டாடினர்.
இப்பணியில் பசுமைப் படையும், என்.எஸ்.எஸ்-ம் பெரும் பங்காற்றினர். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளும் விதைப்பந்து தயாரிப்பில் ஈடுபடுத்தியது பெரிய வரவேற்பு பெற்றது. தலைமையாசிரியர் அருட் சகோதரர் செல்வராஜின் பசுமை முயற்சியை பணகுடி மக்கள் பாராட்டினர். விதைப்பந்து முகாமை உதவி தலைமை ஆசிரியர் ரெக்ஸ் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.