27 October 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இஸ்லாமிய சமூகத்திற்கு ஏழு சதவீத இட ஒதுக்கீடு; TNTJ வலியுறுத்தல்..

இஸ்லாமிய சமூகத்திற்கு ஏழு சதவீத இட ஒதுக்கீடு; TNTJ வலியுறுத்தல்..

எழுதியவர்: Abubakker Sithik October 27, 2026, 3:44 pm

தமிழக மக்கள் தொகையில் பத்து சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கக்கூடிய இஸ்லாமிய சமூகத்திற்கு குறைந்தபட்சம் 7% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என தென்காசி மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்காசி மாவட்ட செயற்குழு கூட்டம், மாவட்ட தலைவர் அப்துல் ஸலாம் தலைமையில் 25.10.2026 அன்று செங்கோட்டை இஃப்தார் மஹாலில் நடைபெற்றது. இச்செயற்குழுவில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் முஹம்மது ஒலி M.I.Sc கலந்து கொண்டு உரையாற்றினார். மாவட்டத்தின் அனைத்து கிளை நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த செயற்குழுவில், மாவட்ட பொருளாளர் அப்துல் பாசித், மாவட்ட துணைத் தலைவர் அப்துல் பாசித், துணைச் செயலாளர்கள் ஹாஜா மைதீன், பீர் மைதீன், செய்யதலி, அப்துல்லாஹ் மற்றும் ரபீக் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்

1.  தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கக் கூடிய மூன்றரை சதவிகித இட ஒதுக்கீடு என்பது மிகக் குறைவானது. தமிழக மக்கள் தொகையில்  பத்து சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கக்கூடிய இஸ்லமியர்களுக்கு  குறைந்தபட்சம் 7% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கையை பன்னெடுங் காலமாக இஸ்லாமிய சமூகம் ஆட்சியாளர்களிடமும் அரசியல் கட்சிகளிடமும் வைத்து வருகின்றது. சிறுபானமையினர் நலம் நாடி தவெக ஆட்சி நடக்குமேயானால் இஸ்லாமியர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. தென்காசி நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைத்திட நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் தென்காசி சுற்றுவட்டப் பாதை (Ring Road) திட்டப் பணிகள் பல்வேறு காரணங்களால் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவது பொதுமக்களுக்கு பெரும் அவதியைக் கொடுத்து வருகிறது. எனவே, மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இசுற்றுவட்டப் பாதை பணிகளை உடனடியாகத் தீவிரப்படுத்தி, விரைந்து முடிக்க தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

3. தென்காசி மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு ஊரக மற்றும் நகர்ப்புற சாலைகள் மிகவும் பழுதடைந்து, குண்டும் குழியுமாக மாறிவிட்டதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள சேதமடைந்த சாலைகளை உடனடியாகச் சீரமைக்க வேண்டும்.

மேலும் அச்சன்புதூர் வடகரை பகுதியில் ஜல்ஜீவன் 2.0 குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலைகளை ஒரு வருடம் ஆகியும் சரி செய்யாமல் இருக்கும் காரணத்தால் அதிகமான வாகன விபத்துகள் ஏற்படுகிறது. ஆகையால் அரசு இந்த சாலைகளை விரைவாக சரி செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

3. செஞ்சியை சார்ந்த ஏழு வயது சிறுமி, தனது வீட்டில் உறங்கி கொண்டிருந்த போது விடியற்காலையில் காணாமல் போயிருக்கிறார். 10 நாட்களாக தேடியும் அந்த சிறுமியை குறித்த தகவல்கள் எதுவும் இல்லை. தமிழகத்தில் இளம் பெண்கள் சிறு குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளும் குற்றங்களும் அதிகரித்து இருக்கக் கூடிய சூழலில் இது போன்ற விஷயங்களை தடுத்து நிறுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காவல்துறை விரைந்து எடுக்க வேண்டும். மேலும் இக்குற்றங்களின் மூல வேரான போதை, சினிமா, வலைத்தள ஆபாசங்களை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று இந்த கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

4. தமிழகத்தில் நாகை மாவட்டத்தில் சுமார் 135 கோடி அளவிற்கான மெத்தப்பட்டமைன் கைப்பற்றப்பட்டு அதனடிப்படையில், தவெக நிர்வாகி ஒருவர் கைதும் செய்யப்பட்டுள்ளார். முந்தைய காலங்களில் டெல்லியில் கைப்பற்றப்பட்ட 50 கோடி அளவிலான போதைப்பொருளில் தொடர்புடையவர் என்று ஜாபர் சாதிக் எனும் நபர் கைது செய்யப்பட்ட போது அவர் சார்ந்த சமூகத்தையும், கட்சியையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி அந்நபரின் பெயரை பட்டி தொட்டி எங்கும் பரப்பிய ஊடகங்களும், நடுநிலையாளர்களும் இந்த விஷயத்திலும் அதே தர்மத்தோடு நடந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம்.

சம்பந்தப்பட்ட நபரை கட்சி பொறுப்பிலிருந்து தவெக நீக்கி இருப்பது பாராட்டுதற்குரியதாக இருந்தாலும், அவர் மீதான குற்றங்கள் நிருபிக்கப்பட்டு அவருக்கும் இந்த குற்றத்தில் தொடர்புடையவர்களுக்கும் உயர்ந்தப்பட்ச தண்டணை வழங்கப்படுவதை தவெக அரசும், ஒன்றிய அரசும் உறுதி செய்ய வேண்டும் என இந்தக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கின்றோம்.

5. சமீபத்தில் பல மாநிலங்களில் பாஜக அரசாங்கம் ஆளுநர்களை நியமித்து உள்ளது. கிரிமினல்களையும், RSS கொள்கையில் ஊறியவர்களையும் ஒரு மாநிலத்தின் கவர்னராக நியமிக்கும் மோடி அரசின் இந்த நடவடிக்கையை இந்தக் கூட்டத்தின் வாயிலாக வன்மையாக கண்டிக்கின்றோம்.

6. இஸ்லாமிய மதத்திற்கு மாறியவர்களுக்கு பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு கொடுக்கப்படக்கூடிய இட ஒதுக்கீட்டை வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அரசியல் சட்டத்தின் 25 வது பிரிவிற்கு நேர் மாறாகவும், அரசு நிர்வாகத்தின் உரிமைகளை பறிக்கும் வகையிலும் அமைந்துள்ள இத்தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என இந்தக் கூட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொள்கின்றோம். மேலும் இஸ்லாத்திற்கு மதம் மாறியவர்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில், தவெக அரசு உரிய சட்டத் திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.

7. ஆளும் தவெக அரசு சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு RSS அமைப்பின் பேரணிக்கு அனுமதி மறுப்பதற்கு பதிலாக, பேரணி நடத்த அனுமதி வழங்கியதை இக்கூட்டத்தின் வாயிலாக வன்மையாக கண்டிக்கிறோம்.

8. கோவை பீளமேடு அரசு உதவி பெறும் பள்ளியில் அகிலன் எனும் மாணவர்  தற்கொலை செய்து கொண்டிருக்க கூடிய செய்தி மிகப்பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அவருடைய சாதியை சொல்லி இழிவுபடுத்தியதும், அவர் உண்ணக் கூடிய உணவை குறித்து கேவலமாக பேசியதுமே அவருடைய தற்கொலைக்கு காரணமாக உள்ளது.

இதில் உடந்தையாக இருக்கக்கூடிய ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு இருந்தாலும், இது போன்ற நடைமுறைகள் தமிழகத்தில் வேறு எந்த பள்ளியிலும் வேறு எந்த மாணவருக்கும் நடக்காத வகையில் ஆளும் தவெக அரசு உரிய நடவடிக்கைகளை இரும்பு கரம் கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும். ஜாதிய பாகுபாடுகள் இல்லா கல்வி சூழல் தமிழகத்தில் மலர வேண்டும் என இந்த கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

9. கோவில் சொத்துக்கள் சம்பந்தமாக சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பில், கோயில் சொத்துக்களை பராமரிக்கும் பாதுகாப்பாளர் மட்டுமே அரசு என்றும், சொத்துக்களை தன் பெயரில் மாற்றிக் கொள்ள இயலாது என்றும் ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கிறது.

ஆனால் வக்பு வாரிய திருத்த சட்டத்தில் வக்பு வாரிய சொத்துக்களை ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் அரசுக்கு உடைமையானதாக ஆக்கிக் கொள்ள முடியும் என்கின்ற விதி உள்ளது. இது தற்போது வழங்கப்பட்டு இருக்கக்கூடிய தீர்ப்புக்கு நேர் முரணானது.

வக்ப் சட்டம் சம்பந்தமான இறுதி தீர்ப்பு நிலுவையில் உள்ள நேரத்தில், இதே போன்ற உரிமைகளை வக்ப் சொத்துக்களுக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும் என  இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொள்கின்றோம்.

மேற்கண்ட முக்கிய தீர்மானங்கள் TNTJ செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட தொண்டரணி செயலர் தாவூத் தலைமையில் செங்கோட்டை அனைத்து கிளை நிர்வாகிகள் அலியார், சாகுல் ஹமீது ,அப்துல் கரீம், சாகுல் ஆகியோர் செய்திருந்தனர். இறுதியில் மாவட்ட துணை செயலாளர் பீர் மைதீன் நன்றி கூறினார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!