வீட்டின் முன்பாகத் தேங்கிய மழைநீர்; காலணிகளை மாற்றச் சென்றபோது பாம்பு சீறியதால் பரபரப்பு!
ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்கும் நிலையில், பட்டினம்காத்தான் ஊராட்சிக்கு உட்பட்ட சண்முக நகர் 4-வது தெருவில் உள்ள வீட்டுக்குள் சாரைப்பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சண்முக நகர் 4-வது தெருவைச் சேர்ந்த இளையராஜா என்பவரது வீட்டின் முன்பகுதியில் மழைநீர் தேங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டின் முன்பகுதியில் வைக்கப்பட்டிருந்த காலணிகளை மாற்றச் சென்ற குழந்தைகள், அங்கு திடீரென சாரைப்பாம்பு ஒன்று சீறியதைக் கண்டு அச்சமடைந்தனர்.
இதையடுத்து, ராமநாதபுரம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், காலணிகள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் சுருண்டு கிடந்த சாரைப்பாம்பை லாவகமாகப் பிடித்தனர். பின்னர், அந்தப் பாம்பைப் பாதுகாப்பாக வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
குடியிருப்புகள் நிறைந்த பகுதியில், வீட்டுக்குள் சாரைப்பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
மழைக்காலங்களில் வீடுகளின் முன்பகுதியில் மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்வதுடன், காலணிகள் மற்றும் வீட்டைச் சுற்றியுள்ள பொருட்களை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் எனப் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. பாம்புகள் தென்பட்டால் அவற்றைத் தாங்களாகவே பிடிக்க முயற்சிக்காமல், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர் .




You must be logged in to post a comment.