26 October 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » 5 கி.மீ. தூரம் நடந்தே பள்ளிக்குச் செல்லும் 120 மாணவர்கள்!

5 கி.மீ. தூரம் நடந்தே பள்ளிக்குச் செல்லும் 120 மாணவர்கள்!

எழுதியவர்: Baker BAker October 26, 2026, 10:51 pm

சுடுகாடு, அடர்ந்த கருவேல மரங்கள் நிறைந்த பாதுகாப்பற்ற பாதை – மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு!

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி தாலுகா, வேப்பங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட கட்டாலங்குளம் கிராமத்தில், பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, முறையான அரசுப் பேருந்து வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வலியுறுத்தி, மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

கட்டாலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 120 மாணவ, மாணவியர்கள் அருகிலுள்ள டி.எம். கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். ஆனால், கிராமத்திலிருந்து பள்ளிக்குச் செல்ல முறையான சாலை மற்றும் பேருந்து வசதி இல்லாததால், மாணவர்கள் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் நடந்தே பள்ளிக்குச் செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.

காலையில் பள்ளிக்கு உரிய நேரத்தில் சென்றடைய வேண்டும் என்பதற்காக, காலை உணவைக்கூட சாப்பிடாமல் அதிகாலை 7 மணிக்கே மாணவர்கள் வீட்டிலிருந்து புறப்படுகின்றனர். மாலையில் பள்ளி மற்றும் கூடுதல் படிப்பு வகுப்புகள் முடிந்த பின்னர், மீண்டும் நீண்ட தூரம் நடந்து வீடு திரும்புகின்றனர். இதனால் ஏற்படும் உடல் சோர்வு, மாணவர்களின் கல்வி மற்றும் உடல்நலனைப் பாதிப்பதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் செல்லும் வழியில் சுடுகாடு அமைந்துள்ளதுடன், இருபுறங்களிலும் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால், அந்தப் பாதையில் மாணவர்கள் பாதுகாப்பாகச் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகிறது. குறிப்பாக, மாணவிகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர். சமூக விரோதச் செயல்கள் மற்றும் பாலியல் தொந்தரவுகள் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாகவும் மனுதாரர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும், மழைக்காலங்களில் பாதையில் மழைநீர் தேங்கி நிற்பதால், பள்ளிக்குச் செல்வதும் வீடு திரும்புவதும் மேலும் சிரமமாகிறது. பல ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.

கட்டாலங்குளம் கிராமத்தில் போதிய பேருந்து வசதி இல்லாததால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி வேலைக்குச் செல்வோர், மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்குச் செல்லும் பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, கிராம மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் முறையான போக்குவரத்து வசதியை ஏற்படுத்த வேண்டும் என்றும், மாணவர்களின் பள்ளி நேரத்திற்கு ஏற்றவாறு அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், கிராமத்திற்குச் செல்லும் சாலையைச் சீரமைக்கவும், மழைநீர் தேங்குவதைத் தடுக்க உரிய வடிகால் வசதிகளை ஏற்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மாணவிகள் மனுவின் வாயிலாக வலியுறுத்தியுள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!