வானிலை ஆய்வு மையம் விடுத்த ‘அர்னாப் புயல் எச்சரிக்கை’ எதிரொலியாக, ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழை கீழக்கரை நகரின் உள்கட்டமைப்பைத் தலைகீழாக மாற்றியுள்ளது. பிரதான சாலைகள் அனைத்தும் சேறும் சகதியுமாக மாறியுள்ளதுடன், மழைநீருடன் கழிவுநீர் கலந்து ஓடுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
கீழக்கரை நகரில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது பெய்த கனமழையால் அந்தப் பகுதிகள் அனைத்தும் படுகுழிகளாக மாறிவிட்டன.சாலைகளில் ஆங்காங்கே திடீர் பள்ளங்கள் உருவாகியுள்ளன.இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் செல்ல முடியாதவாறு போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பிக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகள் குண்டும் குழியுமான சாலையில் செல்லும்போது நிலைதடுமாறி கீழே விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சாலைகளில் தேங்கிய மழைநீருடன் கழிவுநீர் கலந்து ஆறுபோல் ஓடுவதால் அப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயமும், சுகாதாரச் சீர்கேடும் தீவிரமடைந்துள்ளது.
கீழக்கரையின் பிரதான சாலைகளில் வங்கிகள், மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அதிகளவில் அமைந்துள்ளன. இதனால் தினசரி வேலைக்குச் செல்லும் பணியாளர்கள், மாணவர்கள், நோயாளிகள் மற்றும் வியாபாரிகள் பெரும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.
மழைக்காலத்திற்கு முன்னதாகவே செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளவில்லை எனப் பொதுமக்கள் பகிரங்கமாகக் குற்றம்சாட்டுகின்றனர். தேங்கிய மழைநீரை அகற்றவோ, சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்கவோ இதுவரை எந்தவிதத் துரித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
“ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உடனடியாகத் தலையிட்டு, போர்க்கால அடிப்படையில் தேங்கிய மழைநீரை அகற்றவும், கழிவுநீர் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காணவும், படுகுழியாக மாறியுள்ள சாலைகளைச் சீரமைக்கவும் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!” என்பதே கீழக்கரை மக்களின் தற்போதைய ஒட்டுமொத்தக் குரலாகவும் கோரிக்கையாகவும் உள்ளது.




You must be logged in to post a comment.