26 October 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீர் – பொதுமக்கள் கடும் அவதி; தொற்றுநோய் பரவும் அபாயம்!

கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீர் – பொதுமக்கள் கடும் அவதி; தொற்றுநோய் பரவும் அபாயம்!

எழுதியவர்: Baker BAker October 26, 2026, 9:38 pm

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போதிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை என அப்பகுதி மக்கள் கவலை

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், திருவாடானை பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கழிவுநீர் வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

திருவாடானை பகுதியில் கழிவுநீர் வாய்க்கால்கள் முறையாகத் தூர்வாரப்படாமலும், சீரமைக்கப்படாமலும் இருப்பதால், தற்போது பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து வாய்க்கால்களில் தண்ணீர் வெளியேற முடியாமல் தேங்கியுள்ளது. இதனால் கழிவுநீருடன் மழைநீரும் கலந்து தெருக்களில் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், வாய்க்கால்களின் கரையோரம் அமைந்துள்ள வீடுகளுக்குள்ளும் கோவில்களுக்குள்ளும் கழிவுநீர் புகுந்துள்ளதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

குடியிருப்புப் பகுதிகளில் கழிவுநீர் தேங்கியுள்ளதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்துள்ளதால் குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பொதுமக்கள் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.

வடகிழக்குப் பருவமழை தொடர்பாக வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ள நிலையிலும், மழைநீர் தடையின்றி வெளியேறுவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போதிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தற்போதும் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், நிலைமை மேலும் மோசமடைவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகமும் அதிகாரிகளும் உடனடியாகத் தலையிட வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

குறிப்பாக, அடைப்பு ஏற்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்கால்களை உடனடியாகத் தூர்வாரி சீரமைக்கவும், குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியுள்ள கழிவுநீர் மற்றும் மழைநீரை அகற்றவும், வீடுகளுக்குள் மீண்டும் தண்ணீர் புகுவதைத் தடுக்கவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திருவாடானை பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாகக் கவனம் செலுத்துமா என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!