ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே தவத்திரு சித்திர முத்து அடிகளாரின் கிருபைக்குரிய அருளொளி அறக்கட்டளை வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பார்வதி அம்பிகா சமேத பரஞ்சோதிஸ்வரர் ஆலயத்தில் நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகளுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து விநாயகர் வழிபாடு, பாலிகை பூஜை, கும்ப அலங்காரம் உள்ளிட்ட முதற்கால யாக பூஜைகள் நடைபெற்றன.
இதையடுத்து இரண்டாம் கால யாக பூஜை, கோ பூஜை, நாடி சந்தானம், மகா பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் மேளதாளங்கள் முழங்க புனித கும்பங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, மூலவர் ஸ்ரீ பார்வதி அம்பிகா சமேத பரஞ்சோதிஸ்வரர் ஆலயத்தில் நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தின்போது வானில் கருட பகவான் வட்டமிட்டதாகக் கூறப்பட்ட நிகழ்வு பக்தர்களிடையே ஆன்மிக மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகளும் தீபாராதனையும் நடைபெற்றன.
இவ்விழாவில் உச்சிப்புளி, நாகாச்சி, கல்கிணற்றுவலசை, பூமாலை வலசை, என் மனம் கொண்டான், ஆக்கிடாவலசை, வழுதூர், வாலாந்தரவை, உடைச்சியார் வலசை, ராமநாதபுரம், பனைக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகத்தினர் மற்றும் விழாக் குழுவினர் சிறப்பாகச் செய்திருந்தனர்.




You must be logged in to post a comment.