25 October 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கல்லூர் கண்மாயில் ஆழ்துளைக் கிணறு!

கல்லூர் கண்மாயில் ஆழ்துளைக் கிணறு!

எழுதியவர்: Baker BAker October 25, 2026, 11:50 am

நீர்வரத்துக் கால்வாய் அடைப்பால் விவசாயம் பாதிக்கும் அபாயம் – பொதுமக்கள் வேதனை!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவிற்கு உட்பட்ட கல்லூர் கண்மாய்ப் பகுதியில் குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் அண்மையில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி நடைபெற்றது. இப்பணியின்போது வெளியேற்றப்பட்ட மண் கழிவுகளும் சகதிகளும் அருகிலுள்ள நீர்வரத்துக் கால்வாயில் கொட்டப்பட்டதால், கால்வாய் முற்றிலும் அடைபட்டுள்ளதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மழைக்காலத்தில் கண்மாய்க்கு நீர்வரத்து ஏற்படுவதற்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் கால்வாய் அடைபட்டுள்ளதால், மழைநீர் கண்மாயை வந்தடைவதில் தடை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் கண்மாயில் போதிய அளவு தண்ணீர் தேங்காமல், விவசாயப் பாசனம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும், கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. பொதுமக்களின் புகாரைக் கண்டுகொள்ளாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அப்பகுதியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கண்மாய்ப் பகுதிக்குள்ளேயே ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டுள்ளதால், கண்மாய் நீர் மற்றும் குடிநீரின் தரம் பாதிக்கப்படுமோ என்ற அச்சமும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. குறிப்பாக, கண்மாய் நிரம்பும் காலங்களில் நீரின் தரத்தை முறையாக ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

மேலும், ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டுள்ளதால் கண்மாயில் தேங்கும் நீர் குறைந்து விடுமோ என்ற கவலையும் விவசாயிகளிடம் நிலவுகிறது. இதனால் பாசனத்திற்குத் தேவையான நீர் கிடைக்காமல் பயிர்கள் பாதிக்கப்படக்கூடும் என அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

கண்மாய்களும் நீர்வரத்துக் கால்வாய்களும் விவசாயத்தின் உயிர்நாடியாக விளங்கும் நிலையில், அவற்றைப் பாதுகாப்பதில் சம்பந்தப்பட்ட துறைகள் உரிய கவனம் செலுத்த வேண்டும் எனப் பொதுமக்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே, மாவட்ட நிர்வாகமும் சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, நீர்வரத்துக் கால்வாயில் உள்ள மண் மற்றும் சகதிகளை அகற்றி, தடையற்ற நீர்வரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டுள்ள இடத்தை ஆய்வு செய்து, குடிநீரின் தரம் மற்றும் கண்மாய் நீர்மட்டப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதி கிராம மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!