அரசு நிர்ணயித்த விலையைவிட கூடுதலாக ரூ.350 முதல் ரூ.450 வரை விற்பனை செய்வதாகக் குற்றச்சாட்டு – பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என ஆதங்கம்!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவுக்கு உட்பட்ட பார்த்திபனூர் பகுதியில், அரசு நிர்ணயித்த விலையைவிட கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், இதுதொடர்பாகப் பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் விவசாயி ஒருவர் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பகிரங்கமாகக் குற்றம்சாட்டிய சம்பவம் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பார்த்திபனூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் உர விற்பனையில் நடைபெறுவதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாகப் புகார் தெரிவித்தார்.
அப்போது, அரசு நிர்ணயித்த விலையின்படி ரூ.266.50-க்கு விற்பனை செய்யப்பட வேண்டிய உரம், சில விற்பனை நிலையங்களில் ரூ.350 முதல் ரூ.450 வரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார். அரசு மானியத்தின் மூலம் விவசாயிகளுக்குக் குறைந்த விலையில் கிடைக்க வேண்டிய உரங்கள், கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், இதுதொடர்பாக உரக்கிடங்கு அதிகாரி நாகராஜிடம் பலமுறை புகார் தெரிவித்தும், கோரிக்கைகள் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
உர விற்பனை நிலையங்களில் முறையான ஆய்வு மேற்கொள்ளாமல், புகார்களைப் பெற்றுக்கொண்டு பெயரளவுக்கு ஆய்வு செய்வதாகவும், ஆய்வின்போது முறைகேடுகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பது கேள்விக்குறியாக இருப்பதாகவும் விவசாயி குற்றம்சாட்டினார். மேலும், உர விற்பனையாளர்களிடம் அதிகாரிகள் கையூட்டு பெற்றுக்கொண்டு முறைகேடுகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் அவர் புகார் தெரிவித்தார்.
உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்வது தொடர்பாகப் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், ஆட்சியர்கள் பலர் மாறியபோதிலும் விவசாயிகளின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை என்றும் விவசாயி வேதனையுடன் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
அரசு மானியத்தின் நோக்கம் விவசாயிகளுக்கு உரிய விலையில் இடுபொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதே. ஆனால், கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
எனவே, பார்த்திபனூர் மற்றும் பரமக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள உர விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் நேரடி ஆய்வு மேற்கொண்டு, அரசு நிர்ணயித்த விலைக்கு உரங்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். புகார்களில் உண்மை இருப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மாவட்ட ஆட்சியர் இந்தப் புகாரின் அடிப்படையில் நேரடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு ஆய்வு செய்ய வேண்டும் என்பதை விவசாயிகளின் பிரதான கோரிக்கையாக உள்ளது




You must be logged in to post a comment.