10-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காயம் – அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை
ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிச் சென்ற வேன் வயல்வெளியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காயமடைந்தனர்.
சத்திரக்குடியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயிலும் இருசேரி, செய்யாலூர், வேப்பங்குளம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 15 மாணவ, மாணவிகள் பள்ளி வேனில் சத்திரக்குடி நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, செய்யாலூர் அருகே எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட முயன்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் வயல்வெளியில் கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சிறு காயமடைந்தனர்.
காயமடைந்த மாணவ, மாணவிகள் உடனடியாக மீட்கப்பட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டனர்.
இதுகுறித்து சத்திரக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




You must be logged in to post a comment.