18 October 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » வரலாறு காணாத விலைக்குத் தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்வதா? –தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி கேள்வி..

வரலாறு காணாத விலைக்குத் தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்வதா? –தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி கேள்வி..

எழுதியவர்: Askar October 15, 2026, 8:48 am
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொறுப்புத் தலைவர் அச.உமர் பாரூக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நிலவும் மின் தேவையைச் சமாளிக்கும் பெயரில், வெளிச்சந்தையில் தனியாரிடமிருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை வரலாறு காணாத வகையில் ரூ.35 என்ற அதிஉச்ச விலைக்குக் கொள்முதல் செய்யத் டெண்டர் இறுதி செய்யப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மக்களின் வரிப்பணத்தையும், மின்சார வாரியத்தின் நிதியையும் கோடிகளில் சூறையாடும் இத்தகைய நடவடிக்கை ஏற்புடையதல்ல. மற்ற மாநிலங்கள் முறையான திட்டமிடலோடும், முன்கூட்டியே டெண்டர் கோரியும் மிகக் குறைந்த விலைக்கு மின்சாரத்தைப் பெற்றுவரும் சூழலில், தமிழ்நாடு அரசு மட்டும் ஒரு யூனிட்டுக்கு ரூ.31 முதல் ரூ.37 வரை வாரி வழங்குவது எப்படி நியாயமாகும் என்கிற கேள்வி எழுகிறது. வெறும் சில நாட்களில் பல நூறு கோடி ரூபாய் பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதும், ஒவ்வொரு நாளும் கூடுதல் சுமை உருவாக்கப்படுவதும் நிர்வாகத் திறமையின்மையையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஏற்கனவே கடுமையான நிதி நெருக்கடியிலும், கடன் சுமையிலும் தத்தளித்து வரும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மீது இந்த விவகாரம் பல லட்சம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. வாரியம் சந்திக்கும் இந்த ராட்சத இழப்பைச் சமாளிக்கும் விதத்தில், எதிர்காலத்தில் மின் கட்டணம் தாறுமாறாக உயர்த்தப்பட்டு, அது நேரடியாக நடுத்தர மக்கள், எளிய கூலித்தொழிலாளர்கள் மற்றும் சிறு குறு தொழில் துறையினர் மீது பெரும் பொருளாதாரச் சுமையாகத் திணிக்கப்படும் சூழ்நிலையை உருவாக்கும். எனவே, முறையான நீண்டகாலத் திட்டமிடல் இல்லாமல் கடைசி நேரத்தில் அவசரக் கொள்முதல் என்ற பெயரில் அரங்கேறும் இந்த அதீத விலை ஒப்பந்தத்தை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும், மின் வாரியத்தைப் பாதுகாக்கத் தமிழக அரசு வெளிப்படையான மற்றும் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் எஸ்டிபிஐ கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!