கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகம் சார்பில், ‘தூய்மையே சேவை’ இயக்கத்தின் ஒரு பகுதியாக, திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026, நான்கு வகை கழிவுப் பிரிப்பு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வி.என்.கே. மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் அமுதா தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ரேவதி முன்னிலை வகித்தார். நகராட்சி துப்புரவு ஆய்வாளர் ரவிசங்கர், அனிமேட்டர்கள் குழுவினர் மற்றும் சமூக ஆர்வலர் ஜெயராமன் ஆகியோர் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் உருவாகும் கழிவுகளை மட்கும் குப்பை, மட்காத குப்பை, அபாயகரமான குப்பை மற்றும் சிறப்புக் குப்பை என நான்கு வகையாகப் பிரித்து வழங்குவதன் அவசியம் குறித்து விளக்கப்பட்டது. மேலும், அதிக அளவில் கழிவுகளை உருவாக்கும் நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள், வீடுகளில் இயற்கை உரம் தயாரிக்கும் முறைகள் மற்றும் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில் கல்லூரி பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். தூய்மையைப் பேணுவதையும், கழிவுகளை முறையாகப் பிரித்து வழங்குவதையும் அன்றாட வாழ்வில் கடைப்பிடிப்போம் என மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.





You must be logged in to post a comment.