18 September 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேட்டுப்பாளையத்தில் பாம்புக்கடி விழிப்புணர்வு பேரணி.!

மேட்டுப்பாளையத்தில் பாம்புக்கடி விழிப்புணர்வு பேரணி.!

எழுதியவர்: Baker BAker September 18, 2026, 6:16 pm

 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை மற்றும் பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (UIT) கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் உலக பாம்புக்கடி விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

 

மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதி மற்றும் விவசாய நிலங்கள் சூழ்ந்துள்ள மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெயில் மற்றும் மழைக்காலங்களில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் பாம்புகள் வருவது அதிகரிக்கிறது. இதையடுத்து, பாம்புகளைப் பற்றிய அச்சத்தைப் போக்குவதுடன், பாம்புக்கடி ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி மற்றும் மருத்துவ நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடத்தப்பட்டது.

 

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கார்த்திக் மகாராஜா வழிகாட்டுதலின்படி நடைபெற்ற பேரணியை மருத்துவர் ரேணுகா தேவி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இதில் UIT கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். மாணவர்கள் பாம்புக்கடி தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக அணிவகுத்துச் சென்றனர்.

 

நம் பகுதிகளில் காணப்படும் பல்வேறு பாம்பு இனங்களில் பெரும்பாலானவை விஷமற்றவை என்றும், மருத்துவ ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நல்ல பாம்பு (Cobra), கட்டுவிரியன் (Common Krait), கண்ணாடி விரியன் (Russell’s Viper), சுருட்டை விரியன் (Saw-scaled Viper) ஆகிய நான்கு முக்கிய விஷப் பாம்புகள் ‘The Big Four’ என அழைக்கப்படுகின்றன என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

 

சாரைப்பாம்பு, தண்ணீர் பாம்பு, மண்ணுளி பாம்பு உள்ளிட்ட விஷமற்ற பாம்புகள் விவசாய நிலங்களில் எலிகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக உள்ளன. எனவே, பாம்புகளைக் கண்டவுடன் தேவையின்றி அடித்துக் கொல்வதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

 

வெயில் காலங்களில் குளிர்ச்சியான இடங்களைத் தேடியும், மழைக்காலங்களில் வளைகளில் தண்ணீர் புகுவதாலும் பாம்புகள் குடியிருப்புகளுக்குள் வரக்கூடும். வீடுகளைச் சுற்றி குப்பைகள், கற்கள், விறகுக் குவியல்கள் தேங்காமல் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் பாம்புகள் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

 

பாம்பு கடித்தால் பதற்றமடையாமல், பாதிக்கப்பட்ட நபரை தேவையின்றி நடக்கவோ ஓடவோ விடாமல் விரைவாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். கடித்த இடத்தில் கயிற்றால் இறுக்கமாகக் கட்டுதல், பிளேடால் கீறுதல், ரத்தத்தை வெளியேற்றுதல் அல்லது வாயால் விஷத்தை உறிஞ்சுதல் போன்ற ஆபத்தான முறைகளைப் பின்பற்றக்கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

 

பேரணியில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஷாநவாஸ், ஹபிபுல்லா, தமிழன் அக்பர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். பேரணியின் நிறைவில் பொதுமக்களுக்கு பாம்புக்கடி தடுப்பு, முதலுதவி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!