ராமநாதபுரத்தில் இந்தியாவின் முன்னணி நகர எரிவாயு விநியோக நிறுவனமான ‘திங்க் கேஸ்’, தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்துடன் இணைந்து அரசு பேருந்துகளுக்கான பிரத்யேக சிஎன்ஜி (CNG) எரிவாயு நிலையத்தை அமைத்துள்ளது.
ராமநாதபுரம் பகுதியில் இயக்கப்படும் 100-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்கும் வகையில் இந்த சிஎன்ஜி நிலையம் செயல்பட உள்ளது. தமிழக போக்குவரத்துக் கழகத்துடன் இணைந்து இயங்கும் முதல் பிரத்யேக சிஎன்ஜி நிலையம் என்ற வகையில் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சிஎன்ஜி எரிபொருளை பயன்படுத்தும் பேருந்துகள் ஒருமுறை எரிபொருள் நிரப்பிய பின்னர் சுமார் 220 கி.மீ. வரை பயணிக்கக்கூடிய வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து மற்றும் வணிக வாகனங்களின் பயன்பாட்டிற்காக சிஎன்ஜி கட்டமைப்பை மேலும் விரிவுபடுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
ராமநாதபுரத்தில் தற்போது 10 சிஎன்ஜி நிலையங்கள் இயங்கி வருவதாகவும், அடுத்தடுத்த காலங்களில் கூடுதல் நிலையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த 10 முதல் 12 மாதங்களில் ராமநாதபுரம் நகராட்சிப் பகுதியில் புதிய சிஎன்ஜி இணைப்பு வசதிகளை விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளில் வீடுகளுக்கும் இயற்கை எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 3,036 வீடுகளுக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், 8,013 வாடிக்கையாளர்கள் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் வாகனங்களில் இருந்து வெளியேறும் மாசுபாட்டை குறைத்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த பொதுப் போக்குவரத்தை ஊக்குவிப்பதே நிறுவனத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் அரசு பேருந்துகளுக்கான பிரத்யேக சிஎன்ஜி நிலையம் தொடங்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் மாவட்டத்தில் இயற்கை எரிவாயு பயன்பாடு மேலும் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.




You must be logged in to post a comment.