14 September 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பழங்குடியின மாணவர்களுக்கான இலவச அரசுப் பணிப் பயிற்சி .!

பழங்குடியின மாணவர்களுக்கான இலவச அரசுப் பணிப் பயிற்சி .!

எழுதியவர்: Baker BAker September 14, 2026, 10:28 am

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பழங்குடியின மாணவர்களை அரசு நிர்வாகம் மற்றும் அரசுப் பணிகளில் அதிகளவில் இடம்பெறச் செய்யும் நோக்கில், மேட்டுப்பாளையம் சுப மருத்துவமனை சார்பில் மறைந்த மருத்துவர் சுசீலா அம்மாள் பெயரில் இலவச அரசுத் தேர்வுகள் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

 

மேட்டுப்பாளையம் சுப மருத்துவமனை தலைமை மருத்துவர் நா. மகேஸ்வரன் மற்றும் மருத்துவர் கலா மகேஸ்வரன் ஆகியோர் முன்னெடுப்பில் தொடங்கப்பட்டுள்ள இப்பயிற்சி மையத்தில், பழங்குடியின மாணவர்களுக்கு TNPSC குரூப் 1, 2, 3, 4, UPSC, வங்கி, ரயில்வே, காவலர் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

 

பயிற்சி முழுவதும் மாணவர்களுக்கு கட்டணமின்றி வழங்கப்படுவதுடன், மலைக் கிராமங்களில் இருந்து பயிற்சிக்கு வரும் மாணவர்களின் போக்குவரத்து மற்றும் உணவுச் செலவுகளையும் சுப மருத்துவமனை நிர்வாகம் ஏற்றுக்கொள்கிறது.

 

கோவை அரசுத் தேர்வுகள் பயிற்றுநர் காயத்ரி விவேக் தலைமையில் பயிற்சிகள் நடைபெறுகின்றன. மேட்டுப்பாளையம் சுப மருத்துவமனை வளாகத்தில் உள்ள லாகினி அரங்கில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில், தமிழக–கேரள எல்லையோர வனப்பகுதியான பட்டப்பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 16 பழங்குடியின மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

 

குழந்தைகள் நலச் செயல்பாட்டாளர் இனியன் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவர் நா. மகேஸ்வரன், மருத்துவர் கலா மகேஸ்வரன், மருத்துவர் இஸ்மாயில், மருத்துவர் சுதா கந்தசாமி, ஆசிரியை மகாலட்சுமி, ஆசிரியர் கா.ரா. பரமேஸ்வரன், பழங்குடியின செயல்பாட்டாளர் ஒடியன் லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கினர்.

 

மறைந்த மருத்துவர் சுசீலா அம்மாள் ஏழை, எளிய மக்களுக்கு ஆற்றிய மருத்துவ மற்றும் சமூகப் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுக்கும் வகையில் இப்பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளதாக மருத்துவர் நா. மகேஸ்வரன் மற்றும் மருத்துவர் கலா மகேஸ்வரன் தெரிவித்தனர்.

 

மேலும், பொருளாதார வசதியற்ற மாணவர்களின் கல்விக்கு உதவுதல், மருத்துவமனை வளாகத்தில் பொது நூலகம் அமைத்து வாசிப்பை ஊக்குவித்தல், இரத்ததான முகாம்கள் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு சமூகநலப் பணிகளையும் சுப மருத்துவமனை நிர்வாகம் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

 

பழங்குடியின இளைஞர்கள் கல்வி மற்றும் போட்டித் தேர்வுகள் மூலம் அரசுப் பணிகளில் முன்னேறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதே இப்பயிற்சி மையத்தின் முக்கிய நோக்கமாகும்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!