ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நுகர்வோர் நலச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சங்கத் தலைவர் செய்யது இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 2025–2026 ஆம் ஆண்டிற்கான சங்கத்தின் தணிக்கை அறிக்கை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
சங்கத்தின் செயலாளர் பாக்கர் அலி ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்தார். பொருளாளர் விஜயராமு தணிக்கை அறிக்கையை சமர்ப்பித்தார். அறிக்கைகள் குறித்து பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டு ஏகமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கூட்டத்தில் கீழக்கரை நகரில் மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய நூலகம் அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், நகரில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு போக்குவரத்து காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
பொதுமக்களுக்கு தரமான மற்றும் நஞ்சில்லாத உணவு கிடைப்பதை உறுதி செய்ய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், உணவுப் பொருட்களின் தரத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
கீழக்கரை புதிய பேருந்து நிலையம் பொதுமக்களுக்கு முழுமையாக பயன்படும் வகையில், அனைத்து புறநகர் பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் பொதுமக்கள் அளிக்கும் புகார் மற்றும் கோரிக்கை மனுக்களுக்கு முறையாக ரசீது வழங்க வேண்டும் என்றும், மனுக்களுக்கு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தீர்வு காணப்பட்டு, அதன் விவரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
புதிய அரசு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, அரசின் நலத்திட்டங்கள் மற்றும் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் பொதுமக்களை சென்றடையும் வகையில் முனைப்புடன் செயல்பட வேண்டும் எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் ஜாகிர் உசேன், சீனி இப்ராஹிம், முகமது யூசுப், முத்துசாமி, மலராஜ் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.




You must be logged in to post a comment.