கடையநல்லூரில் பட்டா கோரி விண்ணப்பம் செய்த நபரிடம் ரூ.4000 லஞ்சம் வாங்கிய சர்வேயர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த இடைத்தரகர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர், கிருஷ்ணாபுரம் மிட்டா ஆபீஸ் தெருவைச் சேர்ந்த G.கருப்பசாமி என்பவரின் தந்தை கணபதி. தன் பெயரில் மிட்டா ஆபீஸ் தெருவில் 1100 சதுர அடி இடத்தை தனது இரு மகன்களான கருப்பசாமி மற்றும் கல்யாணி ஆகியோருக்கு பிரித்து கொடுத்துள்ளார். அதன் பின்பு அந்த இடத்தில் புகார்தாரர் கருப்பசாமி வீடு கட்டி தீர்வையும் செலுத்தி வந்துள்ளார். அந்த இடத்திற்காக தனிப்பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
பின்பு கடையநல்லூர் நகராட்சிக்கு சென்று சர்வேயர் மாரிராஜ் என்பவரை சந்தித்து கேட்ட போது பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி அனுப்பி விட்டதாகவும், பின்னர் ஒரு மாதம் கழித்து ஜெகதீஷ் என்பவர் தன்னுடைய வீட்டிற்கு வந்து சர்வேயர் மாரிராஜ் அனுப்பியதாக சொல்லி இடத்தை பார்வையிட்டு புகார்தாரரின் விண்ணப்பத்தில் சர்வே எண் தவறாக இருப்பதால் மீண்டும் விண்ணப்பிக்க சொன்னதன்படி புகார்தாரர் 10.08.2026 ஆம் தேதி விண்ணப்பித்துள்ளர்.
பின்னர் 08.09.2026 ஆம் தேதி ஜெகதீஷ் புகார்தாரரின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு சார்வேயர் நிலத்தை அளக்க வருவதாக சொல்லி சுமார் மதியம் 2 மணியவில் இருவரும் நிலத்தை அளந்த பின்னர் சர்வேயர் மாரிராஜ் ரூ.10,000 தந்தால் தான் வரைபடம் தயார் செய்து தாசில்தாரிடம் ரிப்போர்ட் அனுப்பி வைப்பேன் என்று கூறியுள்ளார். அவ்வளவு பணம் இல்லை என புகார்தாரர் கூறியுள்ளார்.
பின்னர் 10.09.2026 ஆம் தேதி சுமார் 10.30 மணியளவில் ஜெகதீஷ் புகார்தாரரின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு சர்வேயர் கேட்ட பணம் எங்கே என கேட்டதற்கு அவ்வளவு பணம் இல்லை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியபோது பேரம்பேசி கடைசியாக ரூ.4,000 தரவேண்டும் என்று கறாராக சொல்லி விட்டதால், பணம் கொடுக்க விருப்பம் இல்லாத புகார்தாரர் தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் கடையநல்லூர் சர்வேயர் மாரிராஜ் என்பவர் மீது 11.09.2026-ம் தேதி வழக்கு பதிவு செய்து, ரசாயனப் பவுடர் தடவப்பட்ட ரூ.4,000 பணத்தை புகார்தாரரிடம் கொடுக்க, அந்த பணத்துடன் இன்று 11.09.2026-ஆம் தேதி புகார்தாரர் சர்வேயர் மாரிராஜை சந்தித்த போது, மேற்படி பணத்தை ஜெகதீஷிடம் கொடுக்க கூறியுள்ளார்.
அந்த லஞ்சப் பணத்தை அலுவலகம் முன்பு வைத்து ஜெகதீஷ் பெற்றுக் கொண்டபோது அங்கு மறைந்திருந்த தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் M.பால்சுதர் தலைமையிலான காவலர்களால் சர்வேயர் மாரிராஜ் மற்றும் ஜெகதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.