விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க ரூ.3,000 லஞ்சம் வாங்கிய திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய பெண் பொறியாளரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று கையும் களவுமாகப் பிடித்து அதிரடியாகக் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொறியாளராக ஷேக்கா தில்ஷாத் பர்வீன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது விவசாய நிலத்தின் பயன்பாட்டிற்காக வண்டல் மண் அள்ள அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளார்.
இதற்கான ‘ட்ரிப் சீட்’ அனுமதி வழங்க பொறியாளர் ஷேக்கா தில்ஷாத் பர்வீன் ரூ.5,000 லஞ்சமாக கேட்டுள்ளார். அதில் முன்பணமாக ஏற்கனவே ரூ.2,000 கொடுக்கப்பட்ட நிலையில், மீதித் தொகையான ரூ.3,000-ஐ உடனடியாகத் தருமாறு அவர் வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த விவசாயி, இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் முறைப்படி புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், பெண் பொறியாளரைப் பிடிக்க ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளுடன் விரிவான வலை பின்னினர்.
இதனைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி இன்று மாலை ராமநாதபுரம், சேதுபதி நகரில் உள்ள பொறியாளரின் இல்லத்தில் வைத்து மனுதாரரிடமிருந்து மீதமுள்ள ரூ.3,000 லஞ்சப் பணத்தை ஷேக்கா தில்ஷாத் பர்வீன் வாங்கியுள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை துணை கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படை அதிகாரிகள், அவரை கையும் களவுமாகப் பிடித்து அதிரடியாகக் கைது செய்தனர். அவரிடமிருந்த லஞ்சப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
விவசாயப் பணிகளுக்கு அரசு வழங்கும் சலுகைக்குக் கூட லஞ்சம் கேட்டு பெண் அரசு அதிகாரி கைதான இச்சம்பவம், அப்பகுதி அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




You must be logged in to post a comment.