ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவிற்குட்பட்ட தொண்டியில் இயங்கி வரும் தனியார் கேஸ் ஏஜென்சியில் ஆயிரக்கணக்கான வாடிக்கை யாளர்கள் எரிவாயு இணைப்பு பெற்றுள்ளனர்.
இந்நிலையில், கேஸ் இணைப்பிற்கான இ-கேஒய்சி (e-KYC) பதிவில் கைரேகை மற்றும் கருவிழி பதிவுகளை புதுப்பிக்க வேண்டும் என்றும், அதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைவதாகவும் தகவல் பரவியது.
இதையடுத்து, தொண்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் தங்களது கைக்குழந்தைகளுடன் கேஸ் ஏஜென்சி அலுவலகத்தில் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வாடிக்கையாளர்களை ஒழுங்குபடுத்துவதற்கும், கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்கும் ஏஜென்சி நிர்வாகம் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். மேலும், அலுவலக வளாகத்தில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படாததால், சுட்டெரிக்கும் வெயிலில் கைக்குழந்தைகளுடன் வந்த பெண்கள் உள்ளிட்டோர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதனிடையே, இலவசமாக மேற்கொள்ளப்பட வேண்டிய இ-கேஒய்சி பதிவுக்கு ஏஜென்சி ஊழியர்கள் நபர் ஒருவருக்கு ரூ.250 வசூலிப்பதாக பொதுமக்கள் சிலர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ஏஜென்சி நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்நிலையில், இன்னும் ஆயிரக் கணக்கான வாடிக்கையாளர்கள் தங்களது கைரேகை மற்றும் கருவிழிப் பதிவுகளை புதுப்பிக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, இ-கேஒய்சி புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் எளிதில் பயன்பெறும் வகையில் தொண்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.




You must be logged in to post a comment.