காரில் பதுக்கி வைத்திருந்த 214 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் – 2 பேர் கைது
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி ரோட்டில் போலீசார் நடத்திய அதிரடி வாகனச் சோதனையில், காரில் ரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 214.845 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் சிக்கின. இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.1,68,313 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனச் சோதனையின்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த ஹூண்டாய் கெட்ஸ் காரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது காருக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக காஞ்சிரங்குடியைச் சேர்ந்த சர்புதீன் (45), சுல்தான் கனி (36) ஆகிய இருவரை கீழக்கரை போலீசார் கைது செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன? யாருக்காக கடத்தப்பட்டன? இதன் பின்னணியில் மேலும் யாரேனும் உள்ளனரா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழக்கரை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுக்க போலீசார் தொடர்ந்து வாகனச் சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




You must be logged in to post a comment.